Tuesday 13 March 2018

#ஓர்ஆடும்ஆட்டோகண்ணாடியும்#

வஸ்சுக்குள்ள சனம் நிரம்பி தொங்குறத கண்ட வேலாயுதம்  றைவர் ஓடி வந்து துள்ளி பாய்ஞ்சி ஏறி சீற்றுல இருந்து , மெதுவாக வஸ்ச நகர்த்துன நேரம் ...வீரப்பழபையோட நிண்டவனொருத்தன் ...
" ஏய்...ஏய்..ஏ..ஆடு.. ஆடு.." எண்டு கத்த ..அவண்ட சத்தத்த கேட்ட நாலைஞ்சிபேர் கைய விரிச்சி வஸ்ச மறிக்க ,
நிற்பாட்டுன வஸ்சிலயிருந்து வேலாயுதம் இறங்கி வந்து பார்த்த நேரம் ஆடு ஒண்டுட வகுத்துக்கு மேலாக பின்பக்க டயர் ஏறி இறங்கி இருந்திச்சு..
தொண்டைகுழி துடிதுடிக்க மெல்ல தலையத் தூக்கிப்பார்த்த ஆடு முடியாம நிலத்துல தலையப் போடுது.

என்னெண்டு இவ்வளவு கதியா விசயம் போய் சேந்திச்சோ தெரியா...ஆட்டுக்கடை உதுமான் தலையில கைலேஞ்ச கட்டிக்கொண்டு கத்தியும் கையுமாக குந்திக்கொள்றான்.ரெத்தம் புடிக்க அலுமினிய கோப்பையுமொண்டுகையோட .
குந்தியிருந்து டாக்குத்தரபோல ஆட்ட தொட்டு பார்த்த உதுமான் " மெளத்து வாப்பாஹ் " என்று சலித்துக் கொண்டு எழும்பி நிற்கிறான்.

" ஆர்ர ஆடுடோவ் வாப்பாஹ் இது?"

" காதர்ற ஆடாக்குமெலுவா?"

"ஆட்ட வாங்குனா சந்தைக்கையா வளக்க உடுற?"

"உட்டாப்போல வஸ்ச ஆடுக்கு மேலால ஏத்த செல்லியிரிக்கா?"

நின்றவர்கள் ஆளாளுக்கு கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டிருந்த நேரம் என்ன செய்யுறதெண்டு தெரியாம வேலாயுதம் றைவர் முழிசிக் கொண்டிருக்கிறத வெள்ளும்மா பார்க்கிறா.

" றைவர் என்ன வஸ் போகுமா இல்லையா ?"
"உள்ளுக்குள்ள வேர்த்து கொட்டுது றைவர்"
வஸ்சுக்குள்ள இருந்தும் சத்தம்.

" ஆஹ் ஆடு செத்துக்கெடக்கு என்னெண்டு வஸ்ச எடுக்குற ? என்ன சேட்டையா ஒங்களுக்கு "?
மீன் கோர்வையோட நிண்டவன் பெலக்க குரல்  கொடுக்க ,வெள்ளும்மா வந்து வேலாயுதத்திடம் ஏதோ சொல்ல வேலாயுதம் சீற்றுல ஏறி குந்திட்டான்.

"என்ன வெள்ளுமோ இப்பிடி உட்டுக்கிட்டே இருந்தா சரியா? லெக்கோ சோனக  ஆடுகா அது " மீன்  கோர்வைக்காரன்தான் கேட்கிறான்.

" அஹ்.. மெய்யாவா..நெக்கு தெரியாதே வாப்பா அது. ஆட்டுக்கு சுன்னத்து  வெச்ச ஆரு வாப்பா...நீதானா...ஆடு அரபு பள்ளிக்கும் பெய்த்தாமா  இல்லையா?"
கேள்விகள கேட்டுக்கொண்டே வெள்ளுமா பாய்கள அடுக்கி சணலால கட்டிக்கொள்கிறா.
"இண்டைக்கு ஆட்டுக்கு மேலால ஏத்துனவன் நாளைக்கு மனிசருக்கு மேலாலயும் ஏத்துவான் அதையும் பார்த்துக்கு சும்மா இரிக்க செல்லுவாயாக்குமெனகா ?"

"படுக்குறதுக்கு எடமில்லாம மனிசர் வந்து வஸ்சுக்கு கீழ படுத்தா என்னாப்பா செய்யுற .. ஏத்தத்தான் செய்வான் "

"என்ன வெள்ளுமா பகடியா ..சோனிர ஆடெண்டா என்ன சும்மாவா..பாத்துக்கிட்டேபோக செல்றியா ?"

முழங்காலில் குத்தி தலைக்கேத்துன பாய்க்கட்ட ஏத்துன வேகத்திலேயே இறக்கி கீழ போட்டா வெள்ளுமா.

" நெக்குதெரியும் அங்க சுத்தி இங்க சுத்தி கடசியா எங்க வந்து நிற்பயளெண்டு ..  நெனச்சன் ... நெக்குதெரியும் வாப்பா  ..சோனிர ஆடுதான் ... தெரிஞ்சா வஸ்ச  ஏத்துனான் ?தெரியாம நடந்திச்சி ஆடு  செத்துபெயித்து ..அதுக்கிப்பென்னைவம்...வெட்டுவமா...குத்துவமா அடிபுடி படுவமா ... ஒரு ஆட்டுக்கு நாலு மனிச உசிர எடுப்பமா....
டேய் வேலாயுதம் வஸ்ச எடு  ...நீ  போ நாளைக்கு நான் காதருக்கிட்ட செல்லிக்கிறன்... மஹரிக்கு வாங்கு செல்றது காதுல உளலையா  கலையுங்க வாப்பாஹ்."

சொல்லிற்று வெள்ளுமா திரும்பவும் பாய்கட்ட தலையில வைச்சிற்று நிமிர்ந்து பார்க்கிறா வேலாயுதத்துட வஸ் தபால்கந்தோர தாண்டி போகுது .

#கசகறணம்#

நாற்பது வருடங்களுக்கு முன்பே நலெழுத்து படிக்காத வெள்ளுமாவின் மனித நேயத்தையும் , இன நல்லிணக்கத்தையும்  என் பதின்ம வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த என்னை நடிப்புக்காரனென சொல்லும் பின் நவீன தம்பிகளே உங்கள் வாய்களை Bleach போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.

#ஓர்ஆடும்ஆட்டோகண்ணாடியும்#

No comments:

Post a Comment

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...