Friday 23 March 2018

சாரதியின் கதை. ..ரோசி part 02

====================================

முற்குறிப்பு:- லண்டனில் எங்களை  driveer என்றுதான் அழைப்பார்கள் .அதற்குமப்பால் .சிலர் எங்களை... மிஸ்டர்  , ஜென்டில்மேன் , ஹனி  சார் .Friend , Brother ,  darling , sweet .yo , ya man , handsome என்றெல்லாம் அழைப்பதுண்டு .

இந்த சொற்பிரயோகங்களை  வைத்தே பணக்காரர்படித்தவர்கள் , நடுத்தரத்தினர் , பாட்டாளிகளென்று பிரித்து பார்ப்பார்கள் .

அவரவர் குடும்ப வளர்ப்புமுறை.சுற்றாடல் பழக்கவழக்கங்களை  பொறுத்தே அவர்களின் பேச்சுக்களும் இருக்கும்.

ரோசியின் ஓனர் என்னை மட்டுமல்ல எல்லா ஆண்களையும் கேன்ட்ஸம் என்றே அழைப்பாரென நினைக்கிறேன்.  ஆக தம்பிகள் கடுப்பாகவேண்டாம் அவள் என்னை கேன்ட்ஸம் என்பதில்.
*********************************************

சிறிய கம்பனியில் வேலை செய்யும் போதெல்லாம் கஸ்டமர்கள் எல்லாருமே பழக்கமான முகங்களாக இருப்பார்கள் . ஒவ்வொரு நாளும் பார்ப்பதால்.

இப்போது அப்படியில்லை.. ஒரு கஸ்டமரை ஆறு மாதத்துக்கு பின்பும் காண்பதுண்டென்பதால் அவர்கள் பெரிதாக நினைவில் நிற்பதில்லை .

அது நடந்து நாலைந்து மாதங்களுக்கு பின்பு இருண்ட பின்னேரப்பொழுதொன்றில் போய் வாசல் முன்பு நின்ற போதுதான் அது ரோசியின் வீடேன்பதை உணர்ந்தேன் .

மீண்டும் ஓர் சவ கார் ஓட்ட நான் தயாராக இல்லையென்றாலும் கூட என்னால் தவிர்க்க முடியவில்லை . காரணம் நான் போவதற்கு முன்பே ரோசி யுடன் எனக்காக வெளியே காத்து நின்றிருந்தாள் அவள் .என்றாலும் நான் உடனடியாக ஏற்றிக்கொள்ளவும் இல்லை .

ஹாய் கேன்ட்ஸம் என்று கொண்டு வந்தவளிடம்  சொறி மேடம் நான் உன்னை சவாரிக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதென்று நான் சொன்னதும் காரணத்தை கேட்டவளிடம் கடைசியாக நடந்ததை சொன்னதும்தான்  அவளுக்கே அது நினைவுக்கு வந்தது.

ஓஹ்   ..மை  கேன்ட்ஸம் .. ஐ யம் ஸோ  சொறி அபவுட் தற் டே.. 

ஓகே மேடம்.. இருந்தாலும் இன்னொரு தடவை நான் என் காரை நாசம் பண்ண தயாரில்லை ..உன்னை நிராகரிப்பதற்கான சகல காரணங்களும் என்னிடம் உண்டு ..நீ கோவிக்கமுடியாது.

நோ கேன்ட்ஸம் அன்றைய போல இண்டைக்கு நடக்காது நீ என்னை நம்பலாம் என்றாள்.

அண்டைக்கும் இதே போல்தான் சொன்னாய் கடைசியில் என்ன நடந்தது தெரியும்தானே .

அது அன்று... இன்று.... புறோமிஸ் என்னை நம்பு என்று கெஞ்சினாள் ...அப்போதுதான் ரோசியை கவனித்தேன் .குளிர் காலமென்பதால் தலைமூடும் ஜக்கற் . .. கழுத்தில் மப்ளர் என வலைன்டையன் டேயில் காதலனை சந்திக்கபோகும் காதலிபோல ரோசி புல் மேக்கப்பில் இருந்தது.

 ரோசி இன்று அசிங்கம் பண்ணாததென்பதற்கு என்ன உத்தரவாதமென்றதற்கு அதெல்லாம் சீக்கிரட் நீ என்னை நம்பு என்று கொண்டு ஏறியவள் ஒரு வெள்ளை துணியை கார் சீற்றில் விரித்து ரோசியை உட்கார்த்தினாள்.

நான் நாய் வாங்கிய எனது ஆரம்ப நாட்களில் இந்த இடத்தில்தான் யூரின் போக வேண்டுமென்று பழக்குவதற்காக வெளியே அடையாளத்துக்காக ஒரு நியூஸ் பேப்பரை விரிப்பதுண்டு .அப்படி ரோசிக்கான அடையாளம்தான் இந்த வெள்ளை சீலைபோல என்றெண்ணி இதுதானா அந்த சீக்ரட்  என கேட்டபோது அவள் சொன்னாள் ..

நோ ..நோ.. கேன்ட்ஸம் தற் டிபரண்ட்..

அப்ப இந்த வெள்ளை துணி.?

அது ரோசியின் புது உடுப்பு ஊத்தையாகாமல் இருக்க...

அட இஞ்சார்ரா காலத்த. அட்டைக்கு மூத்திரமடிச்சான் ரோசி இண்டைக்கு நமக்கே புதினம்காட்டுது..எனக்குள்ளேயே நினைத்தபடி காரை ஓட்டினேன்.

இடைக்கிடை உள் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டேன்.  வெள்ளை சீலை நனைந்ததாகவும் தெரியல்ல.

டோண்ட் வொறி கேன்ட்ஸம் ஐ யம் ரெல்லிங் யூ. ஸீ இஸ் நொட் கோயின் டூ எனிதிங் ருடே.

சண்டாளி எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறாள்... எனது பயமெல்லாம் ரோசி ஏதும் செய்தால் அதன் பின் அவள் ஸ்பிரே பண்ணும் பேர்பியூம் பற்றித்தான்.

அரைமணி நேர ஓட்டத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது .
அப்போதுதான் திரும்பி பார்த்தேன் .ம்கும் ..
ரோசி ஏதும் நனைத்தாக தெரியவில்லை.

நான்தான் சொன்னேனே நீ என்னை கடைசி வரை நம்பவே இல்லை ஜங் மேன்.

ஆமா ஆச்சரியம் ...ரோசியின் சுகர் லெவல் இப்ப ஓகேவா ?

நோ..கேன்ட்ஸம் ஸ்ரில் சேம்..

அப்ப எப்படி ..இன்று இவ்வளவு கொன்றோளில் ரோசி..?

இறங்க முற்படும் போது கள்ள காதலனிடம் கண்ணடித்து கதைபேசும் காதலிபோல ஒற்றை கண்ணை மூடி அவள் சொன்னதை கேட்டதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை  ஸ்ரேரிங்கில் தலையை புதைத்து சிரித்து கொண்டே இருந்த எனது தொளை அமுக்கி அவள் சொன்னாள்...
வை யூ லாவிங் சில்லி ஜங் மேன்.. இற் இஸ் ட்றூ கேன்ட்ஸம் ...

இறங்கி போய்விட்டாள் ..நான் சிரித்து கொண்டே இருந்தேன்.

அவள் சொன்னது.

யூ ங்நோ கேன்ட்ஸம் மை ரோசி வெயாரிங் நப்பி  .

Tuesday 13 March 2018

சாரதியின் கதையிது
====================

இந்த இடத்தில்  இருந்து இந்த பெயருடையவர் அழைக்கிறார் .அவரை கூட்டிச்சென்று இந்த இடத்தில் விடவேண்டும் என்ற கட்டளை கிடைக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்பதே எனது தொழிலின் முக்கிய சட்ட விதி .

 யாராவது வீதியில் மறித்து அவசரமாக செல்ல வேண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றாலோ ,அல்லது தனக்கோ தன் மனைவி குழந்தைக்கோ சுகவீனம் அவசரமாக மருத்துவமனை  போக வேண்டுமென்று கேட்டாலோ கூட எங்களின் பதிலில் முடியாதென்பதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது .
சில வேளைகளில் இந்த விதி முறைகளை மீறுகின்ற சாரதிகளை கையும் களவுமாக பிடிப்பதற்கென்றே பல அதிகாரிகள் மாறு வேடங்களில் அலைவார்கள் . பார்ப்பதற்கு பரம சாது போல, குடிகாரர் போல , நோயாளிகள்போல , உத்தியோகத்தர்கள் போல ...எப்படி வேசத்திலும் வருவார்கள் இவர்கள் .

ஹுசைன்  ஜேர்மனியில் பிறந்த சோமாலியன் 37 வயது. என்னோடு ஏழு வருட நட்பிலிருக்கிறான். அவனும் சாரதியேதான்.  இருவரின் தாய் மொழியிலிருந்தும் இருபது இருபத்தைந்து சொற்களை புரிந்து கொள்ளுமளவுக்கு எங்களின் நட்பு நெருக்கமானது .இலங்கை யுத்த வரலாறு விபரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறான் .பிரபாகரனை ஹீரோவாக கொண்டாடுவான். அண்ணா என்றுதான் அழைப்பான் . உதவி மனப்பாங்குள்ளவன். இத்தனையும் உள்ள ஹுசைனிடம் உள்ள வீக்பொயின்ர் ஒண்டு என்றால் அது பெண்கள் விசயம்தான்.
எந்த பெண்ணை கண்டாலும் விசிலடிப்பான், கொஞ்சதூரம் பின்னால் போய்பேசுவான்/ பேசமுயற்சித்து திரும்புவான் .பெண் பிரயாணிகளுடன் அதிகமா பேசியதாக கம்ளையின் போய் தனது ரேற்றிங் குறைவதை பெருமையாகசொல்லுவான். மொத்தத்தில் மொக்கு மரத்தைகூட கசிகிறதா நசிகிறதா என்று அமுக்கி பார்க்கும் வீக்கானவன் ஹுசைன்.
இவன் எப்பவாவது ஒருநாள் இந்த அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வானென்பதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை .அதை அவனிடம் சொல்லியுமிருக்கிறேன்.

கடந்த வாரம் அவசரமாக போன்பண்ணியவன். தன்னை நேற்று இரவு  பொலீஸ்அரஸ்ட் பண்ணியதாகவும். இரவு முழுவதும் உள்ளே வைத்திருந்து தனது லோயர்மூலமாக இப்போதுதான் வெளிய வந்திருப்பதாகவும் வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போய் விட முடியுமாண்ணா என்று கேட்ட அரைமணி நேரத்தில் இருவரும் ரெஸ்டாரண்டில் இருந்தோம் .
நான் கூட தம்பி பெட்டையுடன் சேட்டை விட்டுத்தான் மாட்டுப் பட்டிருப்பாரென்றே முதலில் நினைத்தேன். ஆனால் அவன் சொன்ன கதையோ வேறு .
பொதுவாக மாறு வேடத்தில் அதிகாரிகள் காருக்குள் வந்தமர்ந்த நிமிடத்திலேயே சாரதி குற்றவாளியாகி விடுவார்.
யூ ஆர் அண்டர் அரஸ்ட் என்று தமிழ்படங்களில் சொல்வதுபோல அதிகாரி தனது அடையாள அட்டையை காட்டினால்..ஓஹ்.சிற் என்று கொண்டு ட்றைவர் தலையில் கை வைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது . ஆனால் ஹுசைனோ கொஞ்சம் வித்தியாசமாக அதிகாரியின் முகத்திலேயே கை வைத்ததால்தான் கைது வரை போயிருக்கிறது.

ஏனடா இப்படி செய்தாய்என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் ஒரு தர்மம் இருப்பதாகவே தெரிந்தது எனக்கு.

இவன் ஒரு சொப்பிங்சென்ரர் கார் பார்க்கிங்கில் நின்றிருக்கிறான் . சொப்பிங்சுமைகளுடன் கால் முறிந்து காலில் கட்டுப்போட்டு தடியூண்டி வந்தவன் தன்னை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும்படிகேட்க மனமிரங்கிய ஹுசைன் சரி ஏறு என்றிருக்கிறான் காரில் ஏறி உட்கார்ந்தவன் கால்களை நீட்டி நிமிர்த்தி கார்ட்டை காட்ட கடுப்பாகிவிட்டான் ஹுசைன்.

உனது உத்தியோயத்தைநிலை நாட்ட உனக்கு கிடைத்த வேஷம் இதுதானா என்று புதிய பறவை சிவாஜி போல ஹுசைன் வசனம் பேசி இருக்கிறான். இல்லை கோபால் இல்லை என்னை நம்புங்கள் கோபால் என்று பதில் சொல்ல அதிகாரியென்ன சரோஜா தேவியா?
வாக்கு வாதம் முற்ற அதிகாரியின் முகத்தில் குத்திவிட்டான் ஹுசைன்.

இவன் இப்படி வேஷம் போட்டு வந்தால் நாளைக்கு உண்மையிலேயே ஒரு மாற்று திறனாளி ரோட்டில் விழுந்து கிடந்தால்கூட எந்த ட்றைவர் உதவுவான்? எனது கோவம் நியாயமானதா இல்லையா அண்ணா என்று கேட்டபோது என்னிடம் பதிலிருக்கவில்லை.

என்றாலும் ஹுசைன் நீ கை வைத்தது தவறுதான் .இந்த நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஒரு நாள் பொறுமை காத்த கதையொன்றையும் சொல்ல வேண்டியிருந்தது.

கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முந்திய அதிகாலை மூன்று மணியளவில் நோர்த்லண்டன் ஆர்ச்வேய் ரோட்டில் வந்து கொண்டிருக்கிறேன் .  மின்விளக்குகள் பனிபுகாருக்குள் மறைந்திருந்த  மங்கிய வெளிச்சத்தில் நான் கடந்து போகமுடியாதவகயில்  திடீரென வீதியில் இறங்கி கை போட்டு காரை மறிக்க நான் மெதுவாக நிறுத்த ..... உடலெது உடையெது என்று தெரியாத நிறத்தில் கார் ஜன்னலை நெருங்கினாள் அவள்.
அழகி... இருண்ட வீதியில் ..கறுப்பு தாளில் வெள்ளை நிறத்தில் வரைந்த புரியாத நவீன ஓவியம் போல அழகாய் இருந்தாள்.
கார் கண்ணாடியை பாதி இறங்கினேன்.
 என்னை நான் முற்றும் திறந்த முனிவர் மைன்ட் க்கு செற்பண்ணிக் கொண்டேன்.

தேவதை வேடத்தில் வந்திருப்பது அதிகாரியாகவும் இருக்க கூடும் கவனமாக இரடா விமலா என்றது மைன்ட்.
பாதி கண்ணாடிக்குள் தலையை புகுத்தியவள் ஹாய் என்று கொண்டு உதட்டை நெழிக்க முதல் அம்பு வந்து தாக்கியது முனிவனை .முனிவன்அசவதாய்இல்லை.
நேரமாகி விட்டது வாகனம் ஏதுமில்லை  . நான் வீடு போகவேண்டுமென்றாள்.
நான் உனக்கு உதவ முடியாது  மன்னிக்கவும் என்றேன்.
நீ அப்படி சொல்ல முடியாது .இந்த நேரத்தில் நான் எப்படி போவேன் என்றவள்.முனிவன் மேல் எய்வதற்கு இரண்டாவது அம்புனையும் எடுத்தாள்.
பர்சை திறந்து பணத்தை காட்டி எவ்வளவும் தருகிறேன் என்றாள்.
முடியாதென்றேன்.
பாதி திறந்திருந்த கண்ணாடி வழியே முன் அங்கங்களின் பாதிகளை பாதகி வழிய விட்டாள் .
முகத்தை முன் வீதியில் வைத்துக்கொண்டே மன்னிக்கவும் முடியாதென்றேன்.
நான்காவதாக ஒன்று சொன்னாள் அவைகள் எழுத்தில் சொல்லமுடியாதவைகள்.
( வேண்டுமானவர்கள் In Box வாருங்கள் )
இப்போது எனக்கு கொஞ்சம் கோபமும் தலைக்கேறியது.
ஜன்னலில் தொங்குபவள் தலையை வெளியே எடுத்தால்தான் நான் போக முடியும் . நீண்ட நேரமாக நின்றாள் .
நான் போகவேண்டும் என்னை விடு என்றேன்.
எப்படி நீ போக முடியும் இந்த நேரத்தில் என்னை  இந்த இடத்தில் விட்டுவிட்டு என்றாள்.
காற்று வீசியடித்ததில் பின் இறங்கியிதிருந்த உடைவிலத்திய உடல்பகுதியை மூடி மறைக்க அவள்  நிமிர்ந்த போதில் இதுதான் சந்தர்ப்பமென நான் தப்பிப்பிழைத்து வந்த கதையை சொல்லி முடித்தபோது ஹுசைன்என்னை கோவமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல நடக்க வேண்டும் ஹுசைன். நமக்கு நமது லைசன்ஸ் முக்கியமென்ற என்னை ஹுசைன்  முறைத்து  பார்த்து சொன்னான்.

நீ ஒரு F***** இடியட் , ஸ்ருப்பிட் நானாக இருந்திருந்தால் லைசன்ஸ் போனாலும் பரவாயில்லை அந்த B****ஐ  ஏற்றிக்கொண்டே போயிருப்பேன்.

சனவரி31/2018
தமிழ் கடைக்கு போயிருந்தன்.
பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த என்னை வாசலில் வழிமறித்தார்கள் இரண்டு தமிழ் இளைஞர்கள் .

" அண்ணா கொஞ்சம் கதைக்க வேணும் "
" சொல்லுங்க தம்பி என்ன?"
கையிலிருந்த நோட்டீஸ்களில் ஒன்றை கையில் திணித்தார்கள்.
" நாட்டுல நடக்கப்போகிற எலக்சனப்பற்றி கொஞ்சம் கதைக்க வேணும்.
" ம் "
" எங்கட தமிழினத்தின் உரிமைகளை மீட்பதற்கான முயற்சிகள தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு நாங்கள் இந்த தேர்தலில் இவையளுக்கு வாக்களிக்கவேணும்."
"ம் "
" உங்களுக்கு விளங்குதாண்ணா நாங்கள் என்னசொல்றமெண்டு?,
"ம்"
" அதாவதண்ணா நாங்கள் இந்த கருத்தை பரவலாக கொண்டு செல்ல வேண்டும் அண்ணா "
"ம் "
"ஊரிலுள்ள  உறவுகளுக்கு எடுத்து சொல்லவேணுமண்ணா நீங்கள்"
"ம் "
" உங்களுக்கு முகநூல் இருக்காண்ணா?"
"ம் "
" நல்லதண்ணா முகநூலிலும் பகிருங்களண்ணா "
" ம்"
" அண்ணா நாங்கள் சொன்னது விளங்கிச்சோ?"
" ம் "
 " அண்ணா மறக்க வேண்டாம் "

மீண்டும் ஷோபாசக்தியின் நாவல் தலைப்பையே பதிலாக்கி விட்டு நடந்தேன் .
எனது ஊரையோ எனதூரில் அவர்கள் சொன்னவர்கள் போட்டியிடுகிறார்களா என்பது பற்றியெல்லாம்அவர்கள்  கேட்காத வரையில் போதுமென்ற நிம்மதி எனக்கு.

லண்டனில் 30 வருடமாக பல அன்னிய இடங்களுக்கு  சகஜமாக போய்வந்தாலும் மட்டுமரியாதையாக , தயவு தாட்சண்ணியத்தோடு, அடக்கொடுக்கமாக அன்னிய உணர்வுடன்  நான் போய்வரும் இடம்  ஒன்றென்றால் அது நம்ம தமிழ் கடைகள்தான்.

பிப்3/2018
பார்ட்டிகளுக்கு போகும்போது மகனாருக்கு கார் கொண்டு போக அனுமதியில்லை. ஒரு கிளாஸ் பியர் குடித்து பிடிபட்டாலே லைசன்ஸ் பறி போய்விடும்.

நண்பனின்  பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்த மகனை கூட்டி வர போய் வெளியில் காத்திருந்த போது அந்த பிள்ளைதான் முதலில் வெளியே வந்தாள்.
மகனின் பள்ளி தோழி .

பாடசாலை , பல்கலைக்கழகம் வரை தொடர்ந்த நட்பு உத்தியோகஸ்தர் ஆன பின்பும் தொடர்கிறது.
காதலன் இருப்பதாகவும் கேள்வி . கடைசியாக கண்டது மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த மகனின் பிறந்த நாள் பார்ட்டியில்தான்.

கதவை திறந்து வந்தவள் என்னை கண்டதும் ஹாய் அங்கிள் என்றாள்.
பின்னால் மகனும் வந்து நிற்பதை அவள் அவதானிக்கவில்லை.

"எப்படி அங்கிள் இருக்கிறீங்க சுகமா?"

" இருக்கனம்மா நீங்க சுகமா"?

" ஓம் அங்கிள் நல்லம். உங்கள கண்டு கனநாளாயிற்று பார்க்க வித்தியாசமா இருக்கிறீங்க"

" இருக்கும்தானே வயது போனா"

" இல்லை அங்கிள் யு லுக் சோ ஜங் அங்கிள்"
இந்த நேரத்தில்தான் மகன் அந்த பிள்ளையின் முதுகை ஒற்றை விரலால் நோண்டி சொன்னான்.

"பத்து வருசமா நான்  உன்னோட பழகுறன் , இதுவரைக்கும் உனக்கு என்னை பார்க்கவேணுமெண்டு நினைப்பே வரல இப்ப அப்பாவுக்கு லைனா? "

மகனை அடிக்க ஓடினாள்.. .மகன் பிடிபடாமல் ஓடினான் .....இந்த நேரத்தில் அவளின் காதலனும் வெளியில் வந்து  what's going on ? what happened ?என்று  கேட்க மகன் சொன்னான்.

"உன்ர ஆள் என்ரைஅப்பாவுக்கு லைன் போட்றாடா" 

காதலன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அங்கிள் Please அங்கிள் என்னை தாடி வளர்க்க வைச்சிடாதீங்க அங்கிள்"

கொஞ்சநேர சிரிப்புக்கு பின் விடை பெற்று பிரிந்து விட்டார்கள்.

வரும் போது யோசித்தேன்.
இந்த கால தலைமுறை பிள்ளைகள் எவ்வளவு வெளிப்படையாக பேசி, பேசியதுகளை எவ்வளவு ஈஸியாகவும் கையாள்கிறார்கள்.

நடந்தது என்னமோ சிறு சம்பாசனைதான்.அதற்குள் அடங்கியவைகள்.....?????
வயது போனவனென்று ஒதுக்கி , விலத்தி நிற்கும் போலி புனிதத்தை கட்டுடைத்த விதம்.,

நட்புக்கும், காதலுக்கும் இடையிலான வெளிப்படை, புரிந்துணர்வு ....
 எல்லாவற்றையும் ஒரு நூலிழையில் இவர்கள்  எப்படி கடந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகவே இருந்தது.

இந்த சம்பவம் மட்டும் நமது ஊர்களில் நடந்திருந்தால் இந்நேரம் எத்தனை தலைகள் உறுண்டிருக்கும் .

வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவத்தை மனைவியிடம் சொன்னேன்.
மனைவி கேட்குறா..

" இப்ப என்னப்பா இரவு சாப்பாடு ஏதும் வேணுமா இல்ல இதே சந்தோச மிதப்பில தூங்கப்போறியளோ"?

மீண்டும் ஐம்பத்தைந்து வயதானவனானான்  விமலன்.

#நமக்கெண்டேவந்துவாய்ச்சிருக்கபா#

மார்ச்4/ 2018
காலங்காத்தால நாலுமணிக்கே கடுப்பேத்திவிட்டாள் வெள்ளைக்காரி.

சாரதி தொழிலொன்றும் அப்படி சாதாரணமானதில்லைங்க.
எத்தனை வகையான குணமுள்ள மனிதர்களை தினமும் சந்திக்க வேண்டியிருக்கு .அத்தனை பேர்களுக்கும் ஏற்றால் போல் நம்ம நடத்தையையும் மாற்ற வேண்டியதுதான் இந்த தொழிலின் சூட்சுமம்.

வட இந்தியர்கள் மேலதிக சேவையை எதிர்பார்ப்பார்கள். அவர்களை பொறுத்தவரை நாமெல்லாம் சேவகர்கள். லக்கேஜ்களை மூன்றாவது மாடிக்கு கொண்டு வந்து தா , நான்காம் மாடியிலிருந்து இறக்கி வா என்று சொல்பவர்களிடம் அதெல்லாம் என் வேலையல்ல , அது எனது ஹெல்த் & சேவ்டியை பாதிக்கும் என்றால் ஓஹ் உன்னால் இப்படியெல்லாம் பேசமுடியுமா என்பதுபோலொரு பார்வை.

அரபுக்காரரை பொறுத்தவரை நாங்களெல்லாம் அடிமைகள் .அடபோடி என்பதுபோல சொல்லியுமிருக்கிறேன்.

கறுப்பினத்தவர் வேறு மாதிரி. நாம் எதுவும் கேட்டால் ..நீ ஏன் அப்படி கேட்கிறாய்? இதுவே வெள்ளையர்கள் என்றால் இந்த கேள்வியை கேட்பாயா என்று நம்மை துவேஷ குற்றத்துக்குள் தள்ள பார்ப்பார்கள். தாங்கள் கறுப்பரே என்பதை தாங்களே அடிக்கடி சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கே பெருமை என்பதில் எனக்கும் சந்தோசம்தான். என்றாலும் வில்லங்கமான பேர்வழிகளோடுதான் கவனமா இருக்க வேண்டியிருக்கும்.

 ஈஸ்ரன் யூரோப்பியர்களுடன் மட்டும் இதுவரை எந்த பிரச்சினையுமே எனக்கு வந்ததில்லை.

இந்த வெள்ளைக்காரர் இருக்கிறார்களே ?
ப்பாஹ் எல்லாருமே அப்புக்காத்து போலவே பேசுவார்கள். ஐந்து வயது பிள்ளை கூட சட்டத்துக்கு உட்பட்ட வார்த்தைகளைத்தான் பேசும்.

நாங்கள் பேசும் ஒவ்வொரு  சொல்லும் தங்களுக்கு  சாதகமாக இருக்குமென்றால் மட்டுமே அங்கீகரிப்பார்கள். சற்று நேரத்தில் அது பாதகமாகிறதென அறிந்தால் உடனே முழுப்பழியையும் நம் தலையில் தூக்கி வைத்து விடுவார்கள் .

போகவேண்டிய பாதை வாகன நெரிசலாகி போய்ச்சேர தாமதமாகலாமென தெரிந்தால் ... நான் எனக்கு தெரிந்த குறுக்கு பாதைகளால் போய் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக சேர்ந்து விட்டால் ...
" Oh.. you know all the short way. Very good driver you are . I never see driver like a you " 
என்று பாராட்டுவார்கள் .அதே நேரம் நான் எடுத்த பாதையும் நெரிசலாகி சற்று தாமதித்தால் நீ வர வேண்டிய பாதையால் வராதபடியால்தான் இப்படி என மாறி நின்று வாதிடும் போது நாம் பதில்  வார்த்தை  இல்லாமல்  தவிப்பதை தவிர வேறு வழியே இல்லை .

அப்படித்தான் இன்று அதிகாலையிலும் நானே வார்த்தையை கொடுத்து வம்பையும் வாங்கிக் கொண்டேன்.

விமான நிலைய பயணமென்றால் . பாஸ்போர்ட் ரிக்கற் எல்லாம் எடுத்தாயா என்று கஸ்ரமரிடம் கேட்பது எனது வழக்கம். அப்படி கேட்க வேண்டுமென்பது சாரதி விதிகளிலில்லை.

சிலர் இரவிரவாக குடித்துவிட்டு அலாரம் வைக்காமல் தூங்கி , தட்டுக்கெட்டு எழும்பி பல், மூஞ்சி கழுவாமல் பிளேனை பிடிக்கும் அவசரத்தில் ஓடிவருபவர்கள் பாஸ்போர்ட் ரிக்கற்றை மறந்துவிட்டும் வந்திருக்கிறார்கள். அதனாலேயே நான் பொதுவாக எல்லோரிடமும் கேட்பது.

இன்று காலை நான்கு மணிக்கு சிங்காரியை ஏற்ற போனால்... வந்து  காருக்குள் ஏறியவளிடம் எனது வழமையான கேள்வியை கேட்க வழமை போல மற்றைய கஸ்ரமர் போலவே அவளும் என்னை பாராட்டி மொட்டையின் உச்சி குளிரவைத்த கொஞ்ச நேரம் வரைக்கும் எனக்கு தெரியாது  என்னை  இன்னும் சற்று நேரத்தில் சகடைசனியன் தொற்றிக் கொள்ளுமென்று.

கார்   நெடுஞ்சாலையை அடைந்த சில நிமிடங்களில் பின்னால் இருந்தவள் எதையோ மறந்து விட்டு வந்தது போல சொல்ல  என்னென்று கேட்டால் பாத்ரூமில் வைத்த கை கடிகாரத்தை மறந்து விட்டாளாம் என்று புறுபறுத்துக்கொண்டே இருந்தாள்.

ஏதோ Greenwich கடிகாரத்தையோ Westminster big Ben யோ விட்டு விட்டு வந்தது போல அலட்டிக் கொண்டு வந்தவள் என்னிடம் கேட்கிறாள் .

" நீயாகுதல் எனக்கு நினைவூட்டியிருக்கலாமே"

" எதை மேடம் உங்கள் கடிகாரத்தையா?"

" இல்லை இன்னும் ஏதாவதை மறந்தேனா என்று"

" மேடம் அது எனது டயூட்டி இல்லையே"

"அப்ப பாஸ்போர்ட் ரிக்கற்றை நினைவு படுத்துவது மட்டும் உனது டயூட்டி ஆகுமா?"

" ஆக... அது கேட்டது குற்றமா "

" நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை "

இதுதான் வெள்ளைக்காரர் .
எனக்கு மண்டையெல்வாம் வெடிக்குமாப் போலிருந்தது .
ஒரு பொயின்ரை பிடித்தால் அதிலேயே தொங்கிக்கொண்டு நிற்பார்கள் .
விமான நிலையம் போகும்வரைக்கும் என்னை வறுத்தெடுத்துவிட்டாள் வெள்ளைக்காரி .
இவள் கை கடிகாரத்தை மறந்ததை நான் நினைவு படித்தியிருக்க வேண்டுமாம்.

# விட்டால் ஜட்டி போட்டேனா ஜங்கி போடமறந்தேனா என்பதைக்கூட நீ நினைவூட்டவில்லை என்று கேட்டாலும் கேட்பாள்போல ?#

பிப்11/2018
அம்பது வருசத்துக்கு முன்னையும் இண்டையப் போலதான் ஒரு சிவராத்திரி நாள்.

அம்மை கண்முழிக்க  என்னையும் கூட்டிப்போனாவு மூண்டாஞ்சோ படத்துக்கு.

ஆரியமாலா படம் கலைஞ்சி வெளியில வந்தா.... புள்ளையளெல்லாம் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்குதுகள்.

தட்டுக்கெட்டு ஓடியாந்து புத்தகபைய தூக்கிக் கொண்டு பள்ளிக்கு ஓடுறன்

கோயில் வாசல் நடுவுல நிண்ட அரிச்சந்திரன் அந்த பட்ட பகல்ல கேட்கிறான்.. ஆரடி கள்ளி அடர்ந்த இந்த காரிருள் நேரத்தில் என்று .
. ராராவா றாவ்வா ஏத்தின மயக்கத்தில இருந்த சந்திரமதியால ஒண்டும் பேசமுடியாததால மடியில கிடக்குற மகனையே பார்த்துக்கொண்டிருக்காள்.

செத்துக் கிடக்குற லோகிதாஸன பார்த்து எனக்கு சிரிப்பு  .இதுக்கு பிறகு சிவன் வந்து அவன உயிர்ப்பிய்ச்சி ஒழுப்பியுட்டு புசுப்பராசா பள்ளிக்கு வந்து காசிக்குட்டிவாத்திக்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளப் போறானெண்றத நினைச்சி நான் பட்ட சந்தோஷம் ஒள்ளமில்ல......
அதெல்லாம் ஒருகாலம்.

இண்டைக்கும் சிவராத்திரிதான்.....
இந்தா...இந்த பொட்டைர கண்வெட்ட கண்வெட்டாம பார்த்துக்கொண்டே கண்முழிக்கிறன் புள்ளையாள்...
பொறுக்கி பொட்டபுள்ள என்னாமா கண்வெட்டுறாளுகா .
பாருங்க அருள் பெறுவீங்க.

#நித்யானந்தம்#
தொடங்கிவிட்டார்கள் கருத்து கந்தசாமிகள்.

மயிலுக்கு மழைவந்தால் மதன குழப்பம் வருவதுபோல்மன்மதன் நாள் வந்தால் இவர்களுக்கு மண்டை வெடிக்க தொடங்கிவிடும்.
இணையத்தில் இருந்து படங்களை சுட்டு போட்டு தத்துவ பிரசங்கம் வைப்பதே இவர்கள் வேலை .
இவர்கள்தான் பண்பாட்டு காவலர்கள்.
கலாச்சார தூண்கள் .இந்த தூண்கள் இல்லையென்றால் உலகமே சரிந்து விழுந்து விடுமென்ற நினைப்பு இவர்களுக்கு.

இவர்களை பொறுத்தவரை இன்றிலிருந்து பத்தாம்மாதத்தில் வீதி, தெருவெல்லாம் அனாதை சிசுக்கள் வீசி எறியப்படும்.

இன்றைய நாள் என்பது இவர்களை பொறுத்தவரை பொடியனுகள் பொட்டைகளுக்கு புள்ளை கொடுக்கும் நாள்.

இன்று இவர் கொடுக்கும் பூ ஒன்றுக்காகத்தான் அந்த புஷ்பம் இவருக்காக காத்து கிடக்கிறது.

காதல், காமம் , வன்புணர்வு , உடலுறவு என்பதுகளுக்கிடையிலான வித்தியாசம் அறியாத பாலியல் வரட்சி கூடிய அறிவாளிகளே !  காதலர் தினம் என்பது படுத்து கழிக்கும் நாளல்லப்பா... அது நினைத்து களிக்கும் நாள் .

மெத்த மேதாவிகளே இந்நாள் காதலர்களுக்கு மட்டுமென்று நீங்கள் நினைப்பதே முதல் தவறு .

நானும் என் மனைவியும்.
என் தாயும் தந்தையும்.
என் பாட்டனும் பாட்டியும் கூட கொண்டாடும் நாள்றாம்பிகளே இந்நாள் .

 வேலை செய்து விட்டு வந்திருக்கிறேன்.
இரவு முழுவதும் ஏற்றி இறக்கியதெல்லாம் காதலர்களை . பார்க்கவேஆசைவரும் அவர்கள் காதலை. நீங்கள் நினைப்பது போலல்ல இந்நாள் . கொடுப்பினை நாளாக, காதலியை ஆராதிப்பதற்கு காத்திருந்த நாளாகவே கருதுவார்கள் அவர்கள் .
காய்ந்த மாடு கம்பில் விழுவது போலவும்,  Post box ஐ கண்டாலே பொத்திக்கொண்டு போகும் வரட்டுணர்வு கொண்ட உங்களுக்கெல்லாம் காதல் பற்றி என்ன தெரிய வாய்ப்பிருக்கும்.

முடியுள்ளவள் அள்ளி முடிவாள். பல்லுள்ளவன் முறுக்கு தின்பான் .உங்களுக்கேன் கடுப்பு.
கடைசியாக ஒன்று . வேண்டு மானால் உங்கள் வீட்டு பிள்ளைகளை கட்டிபோட்டுவையுங்கள் .இந்த உலகத்தை திருத்த மட்டும் வராதையுங்கோ.

#தம்பிகளா முதலில் தம்பி பிடித்து மூத்திரம் இருக்க பழகுங்கோ .பிறகு வாங்கோ காதலர் தினம் பற்றி எங்களுக்கு வகுப்பெடுக்க #.
இது நெருங்கிய நட்பிடமிருந்து கிடைக்கப்பட்ட செய்தி.

சம்பவம் நடந்து கனகாலமல்ல.. இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.

ஊரில் இருக்கும் நட்பின் உறவுக்கார பெண் ... அவ்வளவு வசதியானவரல்ல .

நள்ளிரவில் தாயாருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட ,அயலில் உள்ள ஒரு ஆட்டோவை அழைத்து மருத்துவ மனைக்கு போய்க்கொண்டிருந்த போதில் இருட்டில் ஆட்டோ பள்ளத்தில் விழுந்த வேகத்திலேயே தாயார் பரலோகத்துக்கு ட்றவலாகிவிட்டார்.

தாயாரின் கடமைகளை முடித்து நிமிர்ந்த மகளுக்கு  ஆட்டோக்காரனின கதை கேட்டு பேரதிர்ச்சி.
ஆட்டோவை திருத்த பெரும் தொகை கேட்டு விவாதிக்கிறான்.

ஆட்டோவை கொண்டு  புரட்டி என்தாயாரை கொன்றவனே நீதான்.நீயே என்னிடம் பணம் கேட்பது என்ன நியாயமென அந்த அம்மையார் கேட்டதற்கு .

இல்லை உனது தாயாரை கூட்டி போகவந்த எமதர்மனால்தான் என்ஆட்டோ பாழாகிவிட்டது.  நட்ட ஈடு தரவே வேண்டுமென அடம் பிடித்திருக்கிறான்.
 அப்பாவி பெண்ணும் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தூரத்து உறவுகளிடமிருந்து உதவி பெற்று ஒரு தொகையை ஆட்டோக்காரனுக்கு கொடுத்தும் , ருசிகண்ட பூனைபோல அவன் இன்னும் வேண்டுமென்று அம்மையாரை நச்சரிக்க பலரின் ஆலோசனையின் பெயரில் அந்த பெண் நீதி மன்றத்தை நாடுவதென முடிவெடுத்திருக்கிறார்.

அனேகமாக இந்த கேஸ் நீதிமன்றத்துக்கு வரும்பட்சத்தில்  விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதியால் எமதர்மனுக்கும்  ஆணைபிறப்பிக்கப்படக்கூடும்.
எமதர்மன் சமூகமளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட திகதிக்குள்  எமதர்மன் சரண்டராக வேண்டு மென்றும் சம்மன் அனுப்பக்கூடும். அதையும் எமதர்மன் இக்னோர் பண்ணுவாராக இருந்தால் கண்ட இடத்தில் கைது செய்யும்படி நீதிபதியால் பிடிவிராந்து அனுப்பப்படும் .

ஆக.. அதன்பின்    ... காலம் பூராவும் கயறுவீசி திரிந்த எமதர்மன் பொலீஸ் வலை வீசி தேடப்படப் போகிறார்.
ஓடி களைக்கும் எமதர்மன் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்பான். அப்ப நாங்க சொல்லுவோம்.

#நாங்க எமனுக்கே தண்ணி காட்டுனாக்களெல#

#நடந்த சம்பவம் உண்மை#

பிப்21/2018
சிரியா குழந்தைகளின் கோர படங்களை போட்டுபதிவிடும் நீங்கள் மட்டும்தான் அக்குழந்தைகளுக்காக பிரார்த்திக்கிறீர்களென நாங்கள் தினைக்கிறோமென நீங்கள் நினைப்பதும் , படமோ பதிவுவோபோடாதவர்கள் கல்லெஞ்சுக்காரரென பதிவிடுவதும் அடிமுட்டாள்தனமான சிந்தனை. அவரவர் கவலையும் , பிரார்த்தனையும் அவரவரோடு மட்டுமே.

குழந்தைகள் , கர்ப்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் பார்க்கக் கூடாதென வரையறுக்கப்பட்ட படங்களை பதிவேற்றி பதிவிடும் உங்களுக்கும் சிரிய குண்டுவீச்சாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே  ஒருவகையில் மன பிறழ்வானவர்கள்தான்.

துண்டிக்கப்பட்ட கையொன்றை அணைத்துக் கொண்டு அழுது நிற்கும் குழந்தையின் படத்தையும் , பின்தலையிலிருந்து குருதி சீறிப்பாய உயிர் திறக்கும் சிறுவனின் காணொளியையும் லைக்குகளுக்காக பதிவிட நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்துக்குள் உங்களை அறியாமலேயே நீங்கள் ஒரு சைக்கோவாக மாறுகிறீர்கள் என்பதுதான் உளவியல் உண்மை.

படத்தை போட்டு  கவிதை என்று நாலுவரிகளை எழுதிவிட்டு கூடவே கொசுறாக மற்றவரையும் திட்டுவதென்பது  கண் தெரியாதவனை சாலை கடக்க கைபிடித்து உதவினேன் என்பதையும் தெருவோர பிச்சைக்காரியின் பசிக்கு சோற்று பார்சல் வாங்கிக்கொடுத்தேன் என்று சொல்வதையும்விட கேவலமானது .

உங்களின் இந்த ஈனத்தனமான மனதிலிருந்து நீங்கள் எவ்வளவுதான் மன்றாடி பிரார்த்தித்தாலும் அந்த பிரார்த்தனையை படைத்தவன் ஏற்றுக் கொள்வானென்றா நினைக்கிறீர்கள் .?

பிப்27/2018
என் தகப்பனார் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்தவர் .

ஆம் என் தந்தைக்கு பதினாறு பிள்ளைகள் .

 படைத்தவன் கொடுக்கிறான் பெற்றுக்கொள்கிறேன் என்று ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு மனிசன் நல்லாத்தான் என்ஜாய் பண்ணியிருக்கார்.

என் தாயாருக்கு நான் பத்தாவது குழந்தை .
நான் பிறப்பதற்கு முன்பே இனி எங்களுக்கு குழந்தை வேண்டாம் .இத்துடன் தருவதை நிறுத்திக்கொள் என்றொரு அப்ளிகேசன் கொடுப்பதற்காக அப்பா அம்மாவை அழைத்து கொண்டு  கதிர்காமத்துக்கு நடையாத்திரை போனதாக அம்மா , பெத்தா இருவரும் கதை சொல்லி கேட்டிருக்கிறேன்.அப்படியிருந்தும் தெய்வம் கைவிரித்து கொடுத்த கடைக் குட்டிதான் நான்.




நேற்றிரவு அம்மா கனவில் வந்தார் .வழமையான சந்தோசமில்லை முகத்தில். நிறைய சோகம்.

ஏனம்மா சோகமென்றேன்...
ஒன்றுமில்ல  உன்ட அப்பன நினைச்சித்தான் என்றா.
ஏனம்மா ?
நீ பிறக்க கூடாதென்று என்னை உங்கப்பா காடு கரம்பையெல்லாம் நடை நடையா கூட்டியலைஞ்சி கதிர்காம யாத்திரை போய் வந்தத நினைச்சிதான் கவலைபடுறனென்றா .
அதை இப்பவுமா அம்மா நினைக்கிறது ? விடம்மா .
இப்பதான் நினைக்கிறன்... இப்ப இருக்குற கொத்து ரொட்டி மாதிரி அப்ப இருந்திருந்தால் நாலு கொத்து பார்சல வாங்கி  உங்கப்பனுக்கு  குடுத்திருப்பன் . நடந்த நடையாகுதல் மிஞ்சியிருக்குமே....

அம்மா அப்படி கொடுத்திருந்தால் அப்ப நான்?
என்று கேட்பதற்கு முன்பே அம்மா என்கனவிலிருந்து மறைந்து விட்டா.

ஆக ஒரு கொத்து தத்தில் தப்பி  பிழைத்து பிறந்த #குழந்தைவிமல்தான்நான்#

#அபத்தங்கள்#
இன்னும் இரண்டு மூன்று தசாப்தங்களின் பின்னர்....

2018 இல்  .. கனடாவிலிருந்து துணிந்து சிரியாவுக்கு விமானம் ஓட்டி சென்று சிரிய அகதிகளை ஏற்றி வந்த யாழ்ப்பாண தமிழரின் வீர தீர சாதனை வேண்டுமென்றே இலுமிநாட்டிகளால் மறைக்கப்பட்டதென்று பாரிசாலன் ஆதாரங்களை அள்ளியெறிந்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பார்.

அடேய்....!!!  மோடனுகாள்... மோட்டு பயலுகளே இஞ்ச வாங்கடா.........   2018ல நீங்களெல்லாம் பார்த்து பயந்து கொண்டிருக்க சிரியாக்கு பிளேன் ஓட்டிபோய் ஆட்கள் ஏற்றி வந்தது ஆர் தெரியுமோடா ....?ஹா...ஹா... வரலாறு.... வரலாறு ..தெரியாமல் கதையாதையுங்கோடா  .என்று கத்திக்கொண்டே இருக்கும் கச்சா சிவம் ..

#என்னதுப்புவீங்ளா?#
#பரவாயில்லதுடைச்சிக்கிடுவன்#
பிரார்த்தனைகளாலும் , பூசைகளாலும் மட்டுமே மனித படுகொலைகளை நிறுத்தமுடியுமாயின்,  எங்களின் முள்ளிவாய்க்கால் பேரழிவை ஒரு தேசிக்காய் கொண்டே தடுத்து நிறுத்தியிருப்பான் குறளிகுஞ்சன்.

#மாத்தியோசியுங்கோ#

மார்ச்7/2018
சிரிக்காதீர்கள்  !!

சிரிக்கும் நேரமல்ல இது. நேற்று அவர்கள் சிரித்தார்களாம் இன்று நீங்கள் சிரிக்கின்றீர்களாம்.
உங்கள் இருவரின் சிரிப்புக்கிடையில் அழுவது நாங்கள்தான். ஆமாம்... நாங்கள்...??? நடுநிலை நல்லிணக்க நக்குண்ணி நாய்களென்று எங்களை என்னாவது சொல்லிவிட்டு போங்கள் ஆனால் சிரிக்கும் நேரமல்ல இது. சக மனிதன் மரணத்தில் மகிழ்வது மனிதமற்ற செயல் என்பதை இரு சாராருமே உணரவேண்டிய தருணமிது.

உங்களின் சிரிப்புக்கான காரணம் , அதற்கான நியாயம் எனக்கும் புரிகிறது. அதை அவர்களும் உணராமலில்லை. ஆனாலும்   " இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண..." ..படித்ததில்லையா ?
வேண்டாமே....
என்னிடமும் இருக்கிறது சிரிப்பின் பாக்கி  .
ஆனால் நான் சிரிக்க முடியாது, சிரிக்கவும் மாட்டேன்.  இன்று நான் சிரித்து விட்டு நாளை என்னவென்று என் நண்பனின் முகம் பார்ப்பது ?
எனக்கு நண்பர்களுமில்லை , அவர்கள்  எனது அயலவர்களுமில்லை என்று சொல்லிக்கொண்டே சிரிக்கிறீர்கள் .இந்த குட்டி தீவுக்குள் சோனகனொருவனுக்கு ஒரு தமிழனும் , தமிழனுக்கு ஒரு சோனகனோ நட்பிலில்லை என்பது நாம் இன ஒற்றுமைக்கு வெகு தூரம் பயணிக்க வேண்யிருக்கிறதென்பதை சொல்லகிறது.

சிரிக்காதீர்கள்...
உங்களின் சிரிப்பின் வலிமை , அதன் விலை என்னவென்று தெரியாமலேயே நீங்கள் சிரிக்கிறீர்கள் .

நீங்கள் சேர்ந்து வாழவில்லை சிரிக்கிறோம் என்கிறீர்கள். நாங்கள் அப்படியல்ல ..சேர்ந்து செறிந்து வாழ்பவர்கள். கண்டிக்கு காரணமானவர்கள் போல் எங்கள் ஊரில் இருபக்கத்திலும் இல்லாமலில்லை. பசியோடு காத்திருக்கிறார்கள் .அவர்கள். உங்கள் சிரிப்பை தீனியாக்கிவிடாதீர்கள் அவர்களுக்கு.

உங்களின் சிரிப்பின் பிரதிபலிப்பு.......நாளை உங்கள்  முகநூலின் பதிவைத்தான் மாற்றியமைக்கும் .அதுதான் உங்கள் கடமையும் தேவையும். எங்களின் கவலை...
நாளை மீன் விற்க வரும் மீரிசா திரும்பி போகவேண்டும் ,, மேசன்வேலைக்கு போனமகேந்திரன் திரும்பி வரவேண்டுமேயென்பதே. ஐரோப்பாவிலும் , அரபு நாடுகளிலிருந்தும் பதிவிடும் உங்களுக்கு ஏழைகள் நாளை அகதி முகாம்களில் தஞ்சம்புகுந்து சோற்றுக்கு கையேந்தி நிற்க போவது  பற்றி  எந்த கவலையும் இல்லை .

இஸ்லாமியர்களே இந்த நேரத்தில் சிரிக்கும் இவர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும் இதே நேரத்தில் உங்களிடமும் ஒன்று சொல்கிறேன்.

இந்த நேரத்து உங்கள் ஆற்றாமை, ஆதங்கம் , அங்கலாய்ப்பு , வேதனை , வெப்பிசாரமெல்லாம் புரியாதவர்களல்ல நாங்கள். ஆனால் இந்த உணர்வுகளால் தூண்டப்பட்டு நீங்கள் செய்கின்ற செயல்களால் ஏற்படும்  விளைவுகளுக்கு நியாயம் சொல்ல முடியாத நிலைக்குள்ளாகிவிடாதீர்கள்.இன்று நடந்த அக்கரைப்பற்று , நற்பட்டிமுனை சம்பவங்களை போல் இனியேதும் நடவாதிருக்கட்டும்.

முகநூல் நட்புகளே !மாற்றுமதத்தவர் மனம் நோகும்படி பதிவிடுவதும் ,  புத்தனின் படத்தை போட்டு பொத்துவாயை என  கொமண்டிடுவதும் ... பற்றியெரிந்து விரியும் தீயின் வாய்க்குள் வெண்ணெய் திரணையை திணித்து தீத்துவது போலாகிவிடும்.  சிந்தித்து செயல்படுங்கள்.

#இனவாதபின்னூட்டங்கள்உடனடியாகநீக்கப்படும்#
இப்படி ஒரு பதிவு உலவுவதாக உள் பெட்டிக்குள் வந்தது .எனது பக்கத்தில் நான் இதுவரை காணவில்லை. இதன் உண்மை தன்மையையும் அறிய முடிவில்லை .

என்றாலும் பிரபாகரன் இருந்திருந்தால்......????

 எங்களுக்குள் ஆயிரம் மனக்கசப்புகள் இருந்தாலும் , மதங்களால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்ட சகோதரர்கள். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் அதற்கான பின்விளைவுகளை அரசு சந்திக்க நேருமென பிரபாகரன் எச்சரித்திருப்பார் அல்லது எச்சரித்திருக்கமாட்டார் என்பதையெல்லாம் நம்புவதும் நம்பாமல் விடுவதும் வேறு விசயம் .

பிரபாகரன் இருந்திருந்தால்.....????
இரு இனத்தையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த காடைத்தனத்துக்கு அரசு இடம் கொடுத்திருக்காது.

பிரபாகரன் இருந்திருந்தால்......????
அரசின் கவனம் கண்டியில் திசை திரும்பும் சமயம் பார்த்து பிரபாகரன் நாட்டில் வேறு பகுதியில் பெரியதொருதாக்குதலை நடத்தியிருப்பார். அல்லது நடத்த கூடுமென நினைக்கும் அரசு கண்டி அசம்பாவிதத்துக்கு இடமே கொடுத்திருக்காது.

ஆக பிரபாகரன் இருந்திருந்தால்...???
....
....
....
....
...
...
...
...
...
...
...
...
...
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
...
...

...

கண்டியில் ஒரு ஆட்டோ கண்ணாடி தவறுதலாக உடைந்திருக்கும்.

#That's All#
மார்ச்8/2018

சாமிய்ய்!! எனக்கொருஉண்மைதெரிஞ்சாகனும் சாமிய்.இந்த ஒரு குடை , ஒருகுடையின்கீழ் என்கிற அந்த குடையை வைச்சிருக்கிற  ஆள் யாருங்க சாமீய்?

மார்ச்7/2018
நடுநிலை நல்லிணக்க நக்குண்ணி நாய்களென்று பதிவிடும் நாயகர்களே  !!

 நல்லிணக்கம் என்பதை நீங்கள் என்னவாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் ?

சோனகனும் தமிழனும் சம்மந்தம்பேசி கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி பிள்ளை பெறுவதென்றா நினைத்திருக்கிறீர்கள்?

கண்ட இடத்தில் ஒரு ஹலோ சொல்லி , கைகுலுக்கி கொள்வதும்.
எங்கோ ஒரு ஊரில் காணுமிடத்தில் இவன் என்னூரவன் என்று அருகில் வந்து ஏதும் தேவையா என கேட்டு உதவுவதும்.

பெரும்பான்மையிடத்தில் இக்கட்டில் மாட்டும்போது இவன் என்னூரவன் நான்  அறிந்தவன் என்று அவனுக்கு உதவுவதும் தானுங்கப்பா நல்லிணக்கம் .  இரு இனங்கள்களுக்கு இடையில் சாதாரண மனித மாண்பு உண்டாக வேண்டுமென்பதற்கே இத்தனை இழுபறி...

மனோகணேசனை வைத்து செய்கிறார்களாம் செருப்படி கொடுக்கிறார்களாம் . கொடுங்கள் அதற்காக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களை சோத்துக்கு வழியில்லாமல் கையேந்துபவர்களென்றா இழிவு படுத்துவீர்கள்? தமிழ்பெண்கள் வன்புணர்வுக்கு தூண்டும் வகையில் உடை உடுப்பவர்களென்று பொத்தம்பொதுவாகவா பேசுவீர்கள்? என்னதான் நல்லிணக்கம் பேசினாலும் எங்கள் நாடி நரம்புக்குள்ளும் ரோச குருதிதானய்யா  ஓடுகிறது .

மனோகணேசனை கண்டு கொள்ளும் உங்கள் கண்கள் கண்டிகலவரத்தை கண்டித்தும்   உங்களுக்கு ஆதரவாகவும் எழுதிய தமிழர்களை கண்டு கொள்ளாமல் போனதேனய்யாமார்களே?

உங்களுக்காக எழுதிய அதே மனம்தான் இப்போதுவலிக்கிறது.
அதெப்படி..இப்படியெல்லாம் எழுதுவது சரியில்லையென சொல்வதற்கு உங்களுக்குள் ஒருவருமில்லாமல் போவது?

 கண்டிகலவரம் ஒன்றை உணர்த்துகிறதாம்........
முஸ்லீம் , தமிழ் இரு இனமும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடவேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.  இப்படியும்  ஒரு குறூப் குறி சொல்ல தொடங்கியிருக்கு.
 இன்னும் நாலு யுகம் கடந்தாலும் நாங்கள் சொல்லும் நல்லிணக்கம் வருமென்பதே சந்தேகம்... இதற்குள் கைகோர்த்தல் கவுறுதிரித்தல் என்ற காமடிகளைகேட்கும் போது கோவம்தான் வருகிறது .

அறிக்கை அரசியலிலேயே காலம் கடத்தும் அவதானிகளே ஐம்பது வருடங்கள் ஒன்றாக பழகியவனென்ற அனுபவத்தில் அறிதியிட்டு , சவால் விட்டு சொல்கிறேன்... இலங்கையில் இரு இனங்கள் ஒன்றுசேர்ந்து சிங்கள பெளத்த இனவாதத்துக்கு எதிராக போராடுவார்களென்பது கனவிலும் நடவாத காரியம்.

தங்கள் தங்கள் அபிலாஷைகளையும் , தேவைகளையும் தனித்து நின்றே போராடி அல்லது உடன்பட்டு போய் பெற்றுக்கொள்வார்கள்...

ஆக  இனிமேலாவது  We want meet under one umbrella என்ற கத்தாவையTalk காம  நான் சொல்லும் இந்த  நல்லிணக்கத்தையாவது ஏற்படுத்த முயற்சி செய்யுங்க..

#நம்மால இனியேலா. இரு பெத்தா  உன்னபத்தி நான் எழுதுறன்#

மார்ச்10 / 2018
#ஓர்ஆடும்ஆட்டோகண்ணாடியும்#

வஸ்சுக்குள்ள சனம் நிரம்பி தொங்குறத கண்ட வேலாயுதம்  றைவர் ஓடி வந்து துள்ளி பாய்ஞ்சி ஏறி சீற்றுல இருந்து , மெதுவாக வஸ்ச நகர்த்துன நேரம் ...வீரப்பழபையோட நிண்டவனொருத்தன் ...
" ஏய்...ஏய்..ஏ..ஆடு.. ஆடு.." எண்டு கத்த ..அவண்ட சத்தத்த கேட்ட நாலைஞ்சிபேர் கைய விரிச்சி வஸ்ச மறிக்க ,
நிற்பாட்டுன வஸ்சிலயிருந்து வேலாயுதம் இறங்கி வந்து பார்த்த நேரம் ஆடு ஒண்டுட வகுத்துக்கு மேலாக பின்பக்க டயர் ஏறி இறங்கி இருந்திச்சு..
தொண்டைகுழி துடிதுடிக்க மெல்ல தலையத் தூக்கிப்பார்த்த ஆடு முடியாம நிலத்துல தலையப் போடுது.

என்னெண்டு இவ்வளவு கதியா விசயம் போய் சேந்திச்சோ தெரியா...ஆட்டுக்கடை உதுமான் தலையில கைலேஞ்ச கட்டிக்கொண்டு கத்தியும் கையுமாக குந்திக்கொள்றான்.ரெத்தம் புடிக்க அலுமினிய கோப்பையுமொண்டுகையோட .
குந்தியிருந்து டாக்குத்தரபோல ஆட்ட தொட்டு பார்த்த உதுமான் " மெளத்து வாப்பாஹ் " என்று சலித்துக் கொண்டு எழும்பி நிற்கிறான்.

" ஆர்ர ஆடுடோவ் வாப்பாஹ் இது?"

" காதர்ற ஆடாக்குமெலுவா?"

"ஆட்ட வாங்குனா சந்தைக்கையா வளக்க உடுற?"

"உட்டாப்போல வஸ்ச ஆடுக்கு மேலால ஏத்த செல்லியிரிக்கா?"

நின்றவர்கள் ஆளாளுக்கு கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டிருந்த நேரம் என்ன செய்யுறதெண்டு தெரியாம வேலாயுதம் றைவர் முழிசிக் கொண்டிருக்கிறத வெள்ளும்மா பார்க்கிறா.

" றைவர் என்ன வஸ் போகுமா இல்லையா ?"
"உள்ளுக்குள்ள வேர்த்து கொட்டுது றைவர்"
வஸ்சுக்குள்ள இருந்தும் சத்தம்.

" ஆஹ் ஆடு செத்துக்கெடக்கு என்னெண்டு வஸ்ச எடுக்குற ? என்ன சேட்டையா ஒங்களுக்கு "?
மீன் கோர்வையோட நிண்டவன் பெலக்க குரல்  கொடுக்க ,வெள்ளும்மா வந்து வேலாயுதத்திடம் ஏதோ சொல்ல வேலாயுதம் சீற்றுல ஏறி குந்திட்டான்.

"என்ன வெள்ளுமோ இப்பிடி உட்டுக்கிட்டே இருந்தா சரியா? லெக்கோ சோனக  ஆடுகா அது " மீன்  கோர்வைக்காரன்தான் கேட்கிறான்.

" அஹ்.. மெய்யாவா..நெக்கு தெரியாதே வாப்பா அது. ஆட்டுக்கு சுன்னத்து  வெச்ச ஆரு வாப்பா...நீதானா...ஆடு அரபு பள்ளிக்கும் பெய்த்தாமா  இல்லையா?"
கேள்விகள கேட்டுக்கொண்டே வெள்ளுமா பாய்கள அடுக்கி சணலால கட்டிக்கொள்கிறா.
"இண்டைக்கு ஆட்டுக்கு மேலால ஏத்துனவன் நாளைக்கு மனிசருக்கு மேலாலயும் ஏத்துவான் அதையும் பார்த்துக்கு சும்மா இரிக்க செல்லுவாயாக்குமெனகா ?"

"படுக்குறதுக்கு எடமில்லாம மனிசர் வந்து வஸ்சுக்கு கீழ படுத்தா என்னாப்பா செய்யுற .. ஏத்தத்தான் செய்வான் "

"என்ன வெள்ளுமா பகடியா ..சோனிர ஆடெண்டா என்ன சும்மாவா..பாத்துக்கிட்டேபோக செல்றியா ?"

முழங்காலில் குத்தி தலைக்கேத்துன பாய்க்கட்ட ஏத்துன வேகத்திலேயே இறக்கி கீழ போட்டா வெள்ளுமா.

" நெக்குதெரியும் அங்க சுத்தி இங்க சுத்தி கடசியா எங்க வந்து நிற்பயளெண்டு ..  நெனச்சன் ... நெக்குதெரியும் வாப்பா  ..சோனிர ஆடுதான் ... தெரிஞ்சா வஸ்ச  ஏத்துனான் ?தெரியாம நடந்திச்சி ஆடு  செத்துபெயித்து ..அதுக்கிப்பென்னைவம்...வெட்டுவமா...குத்துவமா அடிபுடி படுவமா ... ஒரு ஆட்டுக்கு நாலு மனிச உசிர எடுப்பமா....
டேய் வேலாயுதம் வஸ்ச எடு  ...நீ  போ நாளைக்கு நான் காதருக்கிட்ட செல்லிக்கிறன்... மஹரிக்கு வாங்கு செல்றது காதுல உளலையா  கலையுங்க வாப்பாஹ்."

சொல்லிற்று வெள்ளுமா திரும்பவும் பாய்கட்ட தலையில வைச்சிற்று நிமிர்ந்து பார்க்கிறா வேலாயுதத்துட வஸ் தபால்கந்தோர தாண்டி போகுது .

#கசகறணம்#

நாற்பது வருடங்களுக்கு முன்பே நலெழுத்து படிக்காத வெள்ளுமாவின் மனித நேயத்தையும் , இன நல்லிணக்கத்தையும்  என் பதின்ம வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த என்னை நடிப்புக்காரனென சொல்லும் பின் நவீன தம்பிகளே உங்கள் வாய்களை Bleach போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.

#ஓர்ஆடும்ஆட்டோகண்ணாடியும்#

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...