Monday 2 April 2018

.          சாரதியின் கதை.

=========================

ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இவன் சொந்த நாட்டுக்காரனே இல்லையென்றாயா முடிவெடுப்பார்கள்?

பாக்கிஸ்தான் காரன் கண்டால் அஸ்ஸலாம் அலைக்கும் என்கிறான்.
 சோமாலியன் கண்டால் பத்து நிமிசம் பிடிச்சு வைச்சு அவன் பாசையிலேயே கதை சொல்லி கழுத்தறுக்கிறான்.

இந்த வெள்ளைக்காரிகள் ஆபிரிக்க ஆண்களிடம் அப்படி எதைத்தான் கண்டாளுகளோ...?  இரவு பார்ட்டிக்கு போய்வருபவளுகள் காரில் ஏறியவுடன் ஹலோ ஹனி ..ஹாய் சுவீற் என்பாளுகள். நாம திருவாய் மலர்ந்து நம்ம அழுகல் ஆங்கிலத்தை காட்டிவிட்டால் அறுத்த கோழி கழுத்தை தோங்க போடுவது போல் முகத்தை மொபைலுக்குள் புதைத்து விடுவாளுகள்.

வெள்ளைக்காரர் வேறு ரகம் . வாழையில் ஊசியேற்றுவதுபோல் நைசா கதைவிடுவார்கள் .
இவ் யூ டோண்ட் மைன்ட்....
 என்றே ஆரம்பிப்பார்கள்
கேட்ட கேள்விக்கு நான் சிறிலங்கன் என்று பதிலளித்தால் ..நினைத்தேன்.. நீ பார்ப்பதற்கு ஆபிரிக்கன் போலிருந்தாலும் உனது ஆக்ஸன் ஏசியனாகவே  தெரிந்த போதே நினைத்தேன் என்பார்கள்... ற்கும் .பெரிய கண்டுபிடிப்புதான்.

இது பரவாயில்லை..  ஒரு கோனர்  கடைக்குள் நுழைந்தேன் .
தமிழ்பெண்தான் காதில் போனோடு நின்றா.
தண்ணீர் போத்தலொன்றை எடுத்து சென்று காசை நீட்டிய போது அடுத்த பக்கத்தில் சீரியல் பற்றி சீரியசா பேசிக்கொண்டிருந்வரிடம் இவ சொல்லுகிறா.... கொஞ்சம் பொறுடி கறுவலொருவன்  நிற்கிறான் அனுப்பிட்டு வாறனென்று.
காசை கொடுத்து மிகுதி சில்லறையை வாங்கும்போது கேட்டேன்..
ஏன் தங்கச்சி உங்கள் கடைக்கு வெள்ளையர்கள் ஆபிரிக்கர்களை தவிர வேறு கஸ்டமர்களே வருவதில்லையா ?
கேட்டதுமே மாமல்லபுரம் சிலை போல நிற்குது தங்கச்சி.

கதவை திறந்து வெளிவரும் போது காதில் விழுகிறது.

"எடி..சரியா கறுவலப்போலடி... நம்மட சிறிலங்கனடி.."

கீத்றோ எயார் போர்ட் கார் பார்க்கில் நிற்கிறேன் .கன நேரமாக என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு ட்றைவர் என்னை நெருங்கி வந்து கேட்கிறார் .

 "அண்ணே நீங்க சிறிலங்கனோ "
"சிறி லங்கன் இல்லையெண்டு நினைத்திருந்தால் இன்னொரு நாட்டவனிடம் என்னெண்டு தம்பி நீர் தமிழில் கேள்வி கேட்பீர் "
"அப்பிடித்தான் நினைச்சனண்ணன் ஆனா உங்கள பார்க்க சொல்லேலாதண்ண "
அறிவு கொழுந்து.

ஆக இத்தால் நான் சொல்ல வருவது என்னவென்றால் முகநூலில் என் படங்களை பார்த்து விட்டு அண்ண நீங்கள் செம அண்ணா என்கிற தம்பிமாருக்கு வடிவேல் வாய்சில் சொல்லுகிறேன் ..அதெல்லாம் கிராபிக்ஸ்டா  சண்டாளனுகளா என்னைய நேரில பார்த்தா செத்துடுவீங்கடா.

மூன்று வருடங்களுக்கு முன்பு சிறிய கம்பனியில் வேலை செய்யும் போது இளம்வயது தமையனையும் தங்கையையும் எயார் போர்ட்டுக்கு அழைத்து  சென்றேன் ஈழத்தவர்கள்தான் .
அப்போதல்லாம்  ட்றைவர் பெயர் கஸ்டமருக்கு அறிவிப்பதில்லை.

பகல் இருண்ட குளிர் காலம் .பின்னேரம் என்பதால் வாகன நெரிசல் .எனக்கு தெரிந்த குறுக்கு பாதைகளால் போய்க்கொண்டிருந்தேன் . சாரதி மாற்று பாதை எடுப்பதை கட்டாயம் கஸ்டமருக்கு சொல்லவேண்டுமென்பது விதி. சொல்லியுமிருந்தேன் காரணத்தோடு.
போய்க்கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு தாயிடமிருந்து போன்.

"எயார் போர்ட் போய் சேர்ந்திட்டியளே?"
" இன்னும் இல்லயம்மா சரியான ட்றபிக் அம்மா."
" இப்ப எவடத்தாலை போறீங்கள் ?"
"தெரியல்லம்மா ட்றவர் சோட் றூட்டாலையெல்லாம் போறான் .. பரவாயில்லை நல்ல ட்றைவர் போலதான் தெரியுறான் "
"விசர் கதை கதை கதைக்கிறாய் பிளைட்டுக்கு நேரமாகுது உவன் சுத்தியடிச்சுக் கொண்டு திரியறான் போல ..ஆரு பிள்ள ட்றைவர்.?"
"தெரியல்லம்மா.. கறுவல்போலவும் தெரியுதம்மா"
" இஞ்சே கவனம்  அங்க உங்க சுத்தி போனதுக்கெல்லாம் சேர்த்து கூட காசு கேட்பான் ... நான் கொம்பனியில பேசுன காசு 40 பவுண்டுக்கு மேல குடுத்திடாதையுங்கோ சரியா.? "
 " சரியம்மா பேந்தெடுக்கிறன் வையுங்கோம்மா"
...
....
...
எயார் போர்ட் போய் பெட்டிகளை இறக்கி 40 பவுண்டுகள் பெற்றுக்கொண்ட பின் கேட்டேன் .
" பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் எவடம்?"
 "omg.. அங்கிள் ....சொறி அங்கிள் .. சொறி ..சொறி..
" கவனமா சந்தோசமாக போய்வாங்க பிள்ளைகள்."
சொல்லி விட்டு வீடு வந்து சேர பத்து மணி..கதவு சாவியை எடுத்து வர  மறந்து போயிருந்தேன். விறைக்கும் குளிர் வேறு. தலைமூடிய ஜக்கற் ...கதவை தட்டினேன் .
ஜன்னல் சீலையை விலத்தி மகள்பார்ப்பது உள் வெளிச்சத்தில் தெரிகிறது.

ஐந்து நிமிடமாகியும் கதவு திறந்தபாடில்லை .மொபைலை எடுத்து  " " "என்னப்பா மனிசன் குளிருக்க விறைச்சி சாகுறான் கதவ திறவாமல் என்ன செய்கிறியள் ?"

அவசரமாக ஓடி வந்து கதவை திறந்த மனைவி கேட்கிறா
" நீங்களேப்பா  .ஆரோ கறுவல் கதவ தட்டுறானம்மா எண்டு பிள்ள சொல்லிச்சு இந்த நேரத்தில திறக்க வேண்டாமம்மா எண்டு நான்தான் சோன்னநானப்பா."
" ....."
" ஏனப்பா அந்த கீய மறக்காமல் கொண்டுபோறதுக்கென்ன உங்களுக்கு... சும்மா கண்ட நேரத்தில வந்து கதவதட்டி மனிசர பயம் காட்டிக்கொண்டு...."
எல்லோரும் தங்கட தங்கட O/L அனுபவம் பற்றி சொல்லும் போதுநான்மட்டும் ஏன் சொல்லக்கூடாது.? நானென்ன. .O/L லே எடுக்காத முட்டகழுதையா ?

எடுத்து விட்றன் கதையை. கேட்டுட்டு இது நம்பும்படியாக இல்லையென்பவர்கள் உடனடி நட்பு நீக்கம் செய்யப்படுவீர்கள்.😁😁😁.
எங்கட காலத்தில் இந்த A கணக்கெல்லாம் இல்ல .D தான் எங்களுக்கு பெரிசு.
 சந்தையில கலப்பு மீன் வாங்குமாதிரித்தான் நானும் ரெண்டொரு D யும் மிச்சமெல்லாம் S உம் Fமா வாங்கியிருந்தன்..
அடுத்த வருசம் A/L . 
எதையும் வித்தியாசமா செய்து பார்க்குற நம்ம புத்தி நம்மள குத்தி கிளப்ப சும்மா இருந்த நான் சும்மா இருக்கேலாம அடுத்த வருசம் O/ L க்கு கோம்சயன்ஸ்சுக்கு ( மனையியல் ) அப்ளை பண்ணிட்டன் .

கோம்சயன்ஸசுக்கான பரீட்சை நிலையம் முஸ்லீம் ஏரியாவுக்குள். ஆய்சா மகா வித்தியாலயம் .
கொஞ்சம் பதட்டத்துடன்தான் உள்ளே போனேன்.
பத்து பேர்களுக்குள்தான் தமிழ் பெண்பிள்ளைகள் . மிகுதியெல்லாம் முஸ்லிம் பெண்பிள்ளைகள் .ஏண்டா எங்கட மானத்தை வாங்குறாய் என்பது போல் தமிழ் பிள்ளைகள் முறைத்து பார்க்குதுகள் .அதற்குள் நம்ம முட்டை காதலி மலரும்.

முஸ்லிம் புள்ளையள் தங்களுக்குள்  குசுகுசுத்து பேசி சிரிக்குதுகள். நிர்வாணகாட்டுவாசிகள் நடுவே இலை தழை உடை உடுத்தவன்போல நான் .

பரீட்சை நேரம் தொடங்கியது. முதலில் எழுத்து பரீட்சை . பழைய வீ சி மெம்பர் கியாவுடீன் மாஸ்டரின் மனைவிதான் பரீட்சை மண்டப மெயின் சுப்போவிசர்.அவர்தான் பேப்பர் தந்தார் . வினாக்களெல்லாம் எனக்கு ஜுஜீப்பி ரகம் .உரிய நேரத்துக்கு முன்பே எழுதி கொடுத்துவிட்டு மிகுதி நேரத்தில் மேசையில்  கீறிய இதயத்துக்குள் அம்பை செருகிக்கண்டிருந்த என்னை  விடைதெரியாமல் முழிசிக்கொண்டிருந்த பெண்கள்  கண்கள் ஆச்சரியமாக பார்க்கிறதையும் அவதானித்தேன்.

எழுத்து பரீட்சை முடிய செய்முறை பரீட்சை.
எல்லாருமே முன்கூட்டியே பேசி வைத்தது போல் ஒன்றாக கூடி கலாய்க்க தொடங்கிவிட்டது பெண்பிள்ளைகள் கூட்டம் .இந்த கூட்டத்துள் ஒரு தமிழ் பிள்ளைகூட இல்லை . என்னை கலாய்த்தவர்களெல்லாமே முஸ்லிம் பிள்ளைகள் . அதிலும் அந்த வாயாடி பொண்ணு என்னை படுத்திய பாடு.... கிட்டத்தட்ட ராக்கிங் தான் .

இரண்டு செய்முறைகள் செய்து காட்ட வேண்டும் .
எனக்கு வந்தது கிழங்கு பொரியலும் , குழந்தை குளிப்பாட்டும் முறையும் .

மரவள்ளிக்கிழங்கை வெட்டும் போது அந்த வாயாடி பொண்ணு கேட்குது.
" பார்க்க பாவமா இரிக்கு கெல்ப் ஏதும் வேணுமா "
கிழங்கை மஞ்சள் தடவி அழகிய கலரில் பதமான பருவத்தில் இறக்கி தட்டில் டிசைனாக அடுக்கி வெங்காயத்தில் சோடினை செய்து பார்வைக்கு வைத்த போது வாயாடி சொல்லுது  " ப்பாஹ் அழகாத்தானிரிக்கி எலா ?"

அடுத்து குழந்தைக்கு குளிப்பாட்டல்...

இளஞ்சூட்டு நீரை புறம் கையால் பதம்பார்த்து தரப்பட்ட பாவை பிள்ளையை நீருக்குள்  இருத்தி நெற்றியில் இரு விரல் மறைத்து குளிக்க வைத்து  , துடைத்து , துவாயில் படுக்க வைத்து , கண் துடைப்பதையும் , பகுடர் போடுவதையும் கியாவுடீன் மாஸ்டரின் மனைவி புன்முறுவலுடன் பார்த்து நின்றா.

" பாப்புள்ளைக்கு உசிர் இருந்தா கூட்டிக்கு போகச்செல்லி குழறுமாக்கும் .. அவ்வளவு அன்பு எலுவாடி ?"
வாயாடி சினேகிதியிடம் கேட்குது.

இது முடிய நான் கிழங்கு பொரியலிடம் போனால் வெறும் தட்டுதான் இருந்தது .திரும்பிப்பார்க்கிறேன் கொடுப்புலிபோல வாயாடி. எனது கிழங்கு பொரியலெல்லாம் வாய்க்குள்.
" என்ன ஊட்ட கொண்டோக இருந்தாக்குமா?"

அன்று நான் தப்பி பிழைத்ததே பெரும்பாடு.என்றாலும்  எனக்கு D கிடைத்ததென்பதை நீங்கள் நம்பித்தான்  ஆகவேண்டும்.

அடுத்த வருடம் A/L பொருளாதாரபாட ரியூசனுக்கு  அதே வீதியில் உள்ள அபுல்ஹஸன் சாரின் வகுப்பின் முதல் நாள் ...
"நீங்கானே அட்டைக்கு கோம்சயன்ஸ் எக்ஸாமுக்கு வந்த ... என்ன பாஸா ? நீங்க அந்த பாப்புள்ளய படுத்துன பாட்டுக்கு பாஸாகாம என்னயிற...."
அட அதே வாயாடி இங்குமா ?
"ஒங்குட பேரென்ன?"
"விமலதாஸன் "
"ஆ...வி..ம..ல..தா..ஸ..னா.?"
சரி அவள்  பெயரென்ன?

அவள் பெயர் தமிழரசி அல்ல .
அவள் பெயர்தான். " நஜீமா"

#புதியநட்புகள் எனது "நஜீமா" பதிவு அவசியம் பார்க்க வேண்டும்#

#நினைவடைசல்#
எங்கள் வேட்கை இன்னும் தணியவில்லை, எங்கள் தாகம் இன்னும் தீரவில்லை  , விட்ட இடத்திலிருந்தே தொடர்வோம் தனி தமிழீழத்தை வென்றெடுப்போம் என வீராதிவீர கோசம் போடும் புலம்பெயர் உறவுகளே.....!!!!

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒற்றை ஆட்களாகத்தான் வந்து சேர்ந்தோம். இப்போது இருபத்தைந்து வயது மகன்களை வைத்திருக்கிறோம். நம்மில் எத்தனை பேர் நம் பிள்ளைகளை இந்த இரண்டாம்போருக்கு நாட்டுக்கு அனுப்ப தயாராகவிருக்கின்றோம்?

முன்னாள் போராளிகள் சும்மாதான் இருக்கிறார்கள். அனுப்பினால் இலவச பயிற்சி அளிப்பார்கள்.  ...

செய்வீர்களா ? செய்வீர்களா?
கொலிடே போய் கீரி மலையிலும் , பாசிக்குடாவிலும் குளிக்க வேண்டுமென்பதற்காக முகத்தை மறைத்து கோசம் போடுபவர்கள் முதலில் போய் இறங்க வேண்டும் .

# இந்த வேட்கை , தாகம் , தமிழீழம் , என்ற வார்த்தைகளுக்கும் , முடிவுகளுக்கும் உரித்துடையவர்கள் அந்த மண்ணில் இருப்பவர்கள் மட்டுமே#

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...