Monday 2 April 2018

எல்லோரும் தங்கட தங்கட O/L அனுபவம் பற்றி சொல்லும் போதுநான்மட்டும் ஏன் சொல்லக்கூடாது.? நானென்ன. .O/L லே எடுக்காத முட்டகழுதையா ?

எடுத்து விட்றன் கதையை. கேட்டுட்டு இது நம்பும்படியாக இல்லையென்பவர்கள் உடனடி நட்பு நீக்கம் செய்யப்படுவீர்கள்.😁😁😁.
எங்கட காலத்தில் இந்த A கணக்கெல்லாம் இல்ல .D தான் எங்களுக்கு பெரிசு.
 சந்தையில கலப்பு மீன் வாங்குமாதிரித்தான் நானும் ரெண்டொரு D யும் மிச்சமெல்லாம் S உம் Fமா வாங்கியிருந்தன்..
அடுத்த வருசம் A/L . 
எதையும் வித்தியாசமா செய்து பார்க்குற நம்ம புத்தி நம்மள குத்தி கிளப்ப சும்மா இருந்த நான் சும்மா இருக்கேலாம அடுத்த வருசம் O/ L க்கு கோம்சயன்ஸ்சுக்கு ( மனையியல் ) அப்ளை பண்ணிட்டன் .

கோம்சயன்ஸசுக்கான பரீட்சை நிலையம் முஸ்லீம் ஏரியாவுக்குள். ஆய்சா மகா வித்தியாலயம் .
கொஞ்சம் பதட்டத்துடன்தான் உள்ளே போனேன்.
பத்து பேர்களுக்குள்தான் தமிழ் பெண்பிள்ளைகள் . மிகுதியெல்லாம் முஸ்லிம் பெண்பிள்ளைகள் .ஏண்டா எங்கட மானத்தை வாங்குறாய் என்பது போல் தமிழ் பிள்ளைகள் முறைத்து பார்க்குதுகள் .அதற்குள் நம்ம முட்டை காதலி மலரும்.

முஸ்லிம் புள்ளையள் தங்களுக்குள்  குசுகுசுத்து பேசி சிரிக்குதுகள். நிர்வாணகாட்டுவாசிகள் நடுவே இலை தழை உடை உடுத்தவன்போல நான் .

பரீட்சை நேரம் தொடங்கியது. முதலில் எழுத்து பரீட்சை . பழைய வீ சி மெம்பர் கியாவுடீன் மாஸ்டரின் மனைவிதான் பரீட்சை மண்டப மெயின் சுப்போவிசர்.அவர்தான் பேப்பர் தந்தார் . வினாக்களெல்லாம் எனக்கு ஜுஜீப்பி ரகம் .உரிய நேரத்துக்கு முன்பே எழுதி கொடுத்துவிட்டு மிகுதி நேரத்தில் மேசையில்  கீறிய இதயத்துக்குள் அம்பை செருகிக்கண்டிருந்த என்னை  விடைதெரியாமல் முழிசிக்கொண்டிருந்த பெண்கள்  கண்கள் ஆச்சரியமாக பார்க்கிறதையும் அவதானித்தேன்.

எழுத்து பரீட்சை முடிய செய்முறை பரீட்சை.
எல்லாருமே முன்கூட்டியே பேசி வைத்தது போல் ஒன்றாக கூடி கலாய்க்க தொடங்கிவிட்டது பெண்பிள்ளைகள் கூட்டம் .இந்த கூட்டத்துள் ஒரு தமிழ் பிள்ளைகூட இல்லை . என்னை கலாய்த்தவர்களெல்லாமே முஸ்லிம் பிள்ளைகள் . அதிலும் அந்த வாயாடி பொண்ணு என்னை படுத்திய பாடு.... கிட்டத்தட்ட ராக்கிங் தான் .

இரண்டு செய்முறைகள் செய்து காட்ட வேண்டும் .
எனக்கு வந்தது கிழங்கு பொரியலும் , குழந்தை குளிப்பாட்டும் முறையும் .

மரவள்ளிக்கிழங்கை வெட்டும் போது அந்த வாயாடி பொண்ணு கேட்குது.
" பார்க்க பாவமா இரிக்கு கெல்ப் ஏதும் வேணுமா "
கிழங்கை மஞ்சள் தடவி அழகிய கலரில் பதமான பருவத்தில் இறக்கி தட்டில் டிசைனாக அடுக்கி வெங்காயத்தில் சோடினை செய்து பார்வைக்கு வைத்த போது வாயாடி சொல்லுது  " ப்பாஹ் அழகாத்தானிரிக்கி எலா ?"

அடுத்து குழந்தைக்கு குளிப்பாட்டல்...

இளஞ்சூட்டு நீரை புறம் கையால் பதம்பார்த்து தரப்பட்ட பாவை பிள்ளையை நீருக்குள்  இருத்தி நெற்றியில் இரு விரல் மறைத்து குளிக்க வைத்து  , துடைத்து , துவாயில் படுக்க வைத்து , கண் துடைப்பதையும் , பகுடர் போடுவதையும் கியாவுடீன் மாஸ்டரின் மனைவி புன்முறுவலுடன் பார்த்து நின்றா.

" பாப்புள்ளைக்கு உசிர் இருந்தா கூட்டிக்கு போகச்செல்லி குழறுமாக்கும் .. அவ்வளவு அன்பு எலுவாடி ?"
வாயாடி சினேகிதியிடம் கேட்குது.

இது முடிய நான் கிழங்கு பொரியலிடம் போனால் வெறும் தட்டுதான் இருந்தது .திரும்பிப்பார்க்கிறேன் கொடுப்புலிபோல வாயாடி. எனது கிழங்கு பொரியலெல்லாம் வாய்க்குள்.
" என்ன ஊட்ட கொண்டோக இருந்தாக்குமா?"

அன்று நான் தப்பி பிழைத்ததே பெரும்பாடு.என்றாலும்  எனக்கு D கிடைத்ததென்பதை நீங்கள் நம்பித்தான்  ஆகவேண்டும்.

அடுத்த வருடம் A/L பொருளாதாரபாட ரியூசனுக்கு  அதே வீதியில் உள்ள அபுல்ஹஸன் சாரின் வகுப்பின் முதல் நாள் ...
"நீங்கானே அட்டைக்கு கோம்சயன்ஸ் எக்ஸாமுக்கு வந்த ... என்ன பாஸா ? நீங்க அந்த பாப்புள்ளய படுத்துன பாட்டுக்கு பாஸாகாம என்னயிற...."
அட அதே வாயாடி இங்குமா ?
"ஒங்குட பேரென்ன?"
"விமலதாஸன் "
"ஆ...வி..ம..ல..தா..ஸ..னா.?"
சரி அவள்  பெயரென்ன?

அவள் பெயர் தமிழரசி அல்ல .
அவள் பெயர்தான். " நஜீமா"

#புதியநட்புகள் எனது "நஜீமா" பதிவு அவசியம் பார்க்க வேண்டும்#

#நினைவடைசல்#

No comments:

Post a Comment

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...