Tuesday, 13 March 2018

சாரதியின் கதையிது
====================

இந்த இடத்தில்  இருந்து இந்த பெயருடையவர் அழைக்கிறார் .அவரை கூட்டிச்சென்று இந்த இடத்தில் விடவேண்டும் என்ற கட்டளை கிடைக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்பதே எனது தொழிலின் முக்கிய சட்ட விதி .

 யாராவது வீதியில் மறித்து அவசரமாக செல்ல வேண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றாலோ ,அல்லது தனக்கோ தன் மனைவி குழந்தைக்கோ சுகவீனம் அவசரமாக மருத்துவமனை  போக வேண்டுமென்று கேட்டாலோ கூட எங்களின் பதிலில் முடியாதென்பதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது .
சில வேளைகளில் இந்த விதி முறைகளை மீறுகின்ற சாரதிகளை கையும் களவுமாக பிடிப்பதற்கென்றே பல அதிகாரிகள் மாறு வேடங்களில் அலைவார்கள் . பார்ப்பதற்கு பரம சாது போல, குடிகாரர் போல , நோயாளிகள்போல , உத்தியோகத்தர்கள் போல ...எப்படி வேசத்திலும் வருவார்கள் இவர்கள் .

ஹுசைன்  ஜேர்மனியில் பிறந்த சோமாலியன் 37 வயது. என்னோடு ஏழு வருட நட்பிலிருக்கிறான். அவனும் சாரதியேதான்.  இருவரின் தாய் மொழியிலிருந்தும் இருபது இருபத்தைந்து சொற்களை புரிந்து கொள்ளுமளவுக்கு எங்களின் நட்பு நெருக்கமானது .இலங்கை யுத்த வரலாறு விபரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறான் .பிரபாகரனை ஹீரோவாக கொண்டாடுவான். அண்ணா என்றுதான் அழைப்பான் . உதவி மனப்பாங்குள்ளவன். இத்தனையும் உள்ள ஹுசைனிடம் உள்ள வீக்பொயின்ர் ஒண்டு என்றால் அது பெண்கள் விசயம்தான்.
எந்த பெண்ணை கண்டாலும் விசிலடிப்பான், கொஞ்சதூரம் பின்னால் போய்பேசுவான்/ பேசமுயற்சித்து திரும்புவான் .பெண் பிரயாணிகளுடன் அதிகமா பேசியதாக கம்ளையின் போய் தனது ரேற்றிங் குறைவதை பெருமையாகசொல்லுவான். மொத்தத்தில் மொக்கு மரத்தைகூட கசிகிறதா நசிகிறதா என்று அமுக்கி பார்க்கும் வீக்கானவன் ஹுசைன்.
இவன் எப்பவாவது ஒருநாள் இந்த அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வானென்பதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை .அதை அவனிடம் சொல்லியுமிருக்கிறேன்.

கடந்த வாரம் அவசரமாக போன்பண்ணியவன். தன்னை நேற்று இரவு  பொலீஸ்அரஸ்ட் பண்ணியதாகவும். இரவு முழுவதும் உள்ளே வைத்திருந்து தனது லோயர்மூலமாக இப்போதுதான் வெளிய வந்திருப்பதாகவும் வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போய் விட முடியுமாண்ணா என்று கேட்ட அரைமணி நேரத்தில் இருவரும் ரெஸ்டாரண்டில் இருந்தோம் .
நான் கூட தம்பி பெட்டையுடன் சேட்டை விட்டுத்தான் மாட்டுப் பட்டிருப்பாரென்றே முதலில் நினைத்தேன். ஆனால் அவன் சொன்ன கதையோ வேறு .
பொதுவாக மாறு வேடத்தில் அதிகாரிகள் காருக்குள் வந்தமர்ந்த நிமிடத்திலேயே சாரதி குற்றவாளியாகி விடுவார்.
யூ ஆர் அண்டர் அரஸ்ட் என்று தமிழ்படங்களில் சொல்வதுபோல அதிகாரி தனது அடையாள அட்டையை காட்டினால்..ஓஹ்.சிற் என்று கொண்டு ட்றைவர் தலையில் கை வைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது . ஆனால் ஹுசைனோ கொஞ்சம் வித்தியாசமாக அதிகாரியின் முகத்திலேயே கை வைத்ததால்தான் கைது வரை போயிருக்கிறது.

ஏனடா இப்படி செய்தாய்என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் ஒரு தர்மம் இருப்பதாகவே தெரிந்தது எனக்கு.

இவன் ஒரு சொப்பிங்சென்ரர் கார் பார்க்கிங்கில் நின்றிருக்கிறான் . சொப்பிங்சுமைகளுடன் கால் முறிந்து காலில் கட்டுப்போட்டு தடியூண்டி வந்தவன் தன்னை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும்படிகேட்க மனமிரங்கிய ஹுசைன் சரி ஏறு என்றிருக்கிறான் காரில் ஏறி உட்கார்ந்தவன் கால்களை நீட்டி நிமிர்த்தி கார்ட்டை காட்ட கடுப்பாகிவிட்டான் ஹுசைன்.

உனது உத்தியோயத்தைநிலை நாட்ட உனக்கு கிடைத்த வேஷம் இதுதானா என்று புதிய பறவை சிவாஜி போல ஹுசைன் வசனம் பேசி இருக்கிறான். இல்லை கோபால் இல்லை என்னை நம்புங்கள் கோபால் என்று பதில் சொல்ல அதிகாரியென்ன சரோஜா தேவியா?
வாக்கு வாதம் முற்ற அதிகாரியின் முகத்தில் குத்திவிட்டான் ஹுசைன்.

இவன் இப்படி வேஷம் போட்டு வந்தால் நாளைக்கு உண்மையிலேயே ஒரு மாற்று திறனாளி ரோட்டில் விழுந்து கிடந்தால்கூட எந்த ட்றைவர் உதவுவான்? எனது கோவம் நியாயமானதா இல்லையா அண்ணா என்று கேட்டபோது என்னிடம் பதிலிருக்கவில்லை.

என்றாலும் ஹுசைன் நீ கை வைத்தது தவறுதான் .இந்த நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஒரு நாள் பொறுமை காத்த கதையொன்றையும் சொல்ல வேண்டியிருந்தது.

கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முந்திய அதிகாலை மூன்று மணியளவில் நோர்த்லண்டன் ஆர்ச்வேய் ரோட்டில் வந்து கொண்டிருக்கிறேன் .  மின்விளக்குகள் பனிபுகாருக்குள் மறைந்திருந்த  மங்கிய வெளிச்சத்தில் நான் கடந்து போகமுடியாதவகயில்  திடீரென வீதியில் இறங்கி கை போட்டு காரை மறிக்க நான் மெதுவாக நிறுத்த ..... உடலெது உடையெது என்று தெரியாத நிறத்தில் கார் ஜன்னலை நெருங்கினாள் அவள்.
அழகி... இருண்ட வீதியில் ..கறுப்பு தாளில் வெள்ளை நிறத்தில் வரைந்த புரியாத நவீன ஓவியம் போல அழகாய் இருந்தாள்.
கார் கண்ணாடியை பாதி இறங்கினேன்.
 என்னை நான் முற்றும் திறந்த முனிவர் மைன்ட் க்கு செற்பண்ணிக் கொண்டேன்.

தேவதை வேடத்தில் வந்திருப்பது அதிகாரியாகவும் இருக்க கூடும் கவனமாக இரடா விமலா என்றது மைன்ட்.
பாதி கண்ணாடிக்குள் தலையை புகுத்தியவள் ஹாய் என்று கொண்டு உதட்டை நெழிக்க முதல் அம்பு வந்து தாக்கியது முனிவனை .முனிவன்அசவதாய்இல்லை.
நேரமாகி விட்டது வாகனம் ஏதுமில்லை  . நான் வீடு போகவேண்டுமென்றாள்.
நான் உனக்கு உதவ முடியாது  மன்னிக்கவும் என்றேன்.
நீ அப்படி சொல்ல முடியாது .இந்த நேரத்தில் நான் எப்படி போவேன் என்றவள்.முனிவன் மேல் எய்வதற்கு இரண்டாவது அம்புனையும் எடுத்தாள்.
பர்சை திறந்து பணத்தை காட்டி எவ்வளவும் தருகிறேன் என்றாள்.
முடியாதென்றேன்.
பாதி திறந்திருந்த கண்ணாடி வழியே முன் அங்கங்களின் பாதிகளை பாதகி வழிய விட்டாள் .
முகத்தை முன் வீதியில் வைத்துக்கொண்டே மன்னிக்கவும் முடியாதென்றேன்.
நான்காவதாக ஒன்று சொன்னாள் அவைகள் எழுத்தில் சொல்லமுடியாதவைகள்.
( வேண்டுமானவர்கள் In Box வாருங்கள் )
இப்போது எனக்கு கொஞ்சம் கோபமும் தலைக்கேறியது.
ஜன்னலில் தொங்குபவள் தலையை வெளியே எடுத்தால்தான் நான் போக முடியும் . நீண்ட நேரமாக நின்றாள் .
நான் போகவேண்டும் என்னை விடு என்றேன்.
எப்படி நீ போக முடியும் இந்த நேரத்தில் என்னை  இந்த இடத்தில் விட்டுவிட்டு என்றாள்.
காற்று வீசியடித்ததில் பின் இறங்கியிதிருந்த உடைவிலத்திய உடல்பகுதியை மூடி மறைக்க அவள்  நிமிர்ந்த போதில் இதுதான் சந்தர்ப்பமென நான் தப்பிப்பிழைத்து வந்த கதையை சொல்லி முடித்தபோது ஹுசைன்என்னை கோவமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல நடக்க வேண்டும் ஹுசைன். நமக்கு நமது லைசன்ஸ் முக்கியமென்ற என்னை ஹுசைன்  முறைத்து  பார்த்து சொன்னான்.

நீ ஒரு F***** இடியட் , ஸ்ருப்பிட் நானாக இருந்திருந்தால் லைசன்ஸ் போனாலும் பரவாயில்லை அந்த B****ஐ  ஏற்றிக்கொண்டே போயிருப்பேன்.

சனவரி31/2018

No comments:

Post a Comment

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...