Monday, 2 April 2018

.          சாரதியின் கதை.

=========================

ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இவன் சொந்த நாட்டுக்காரனே இல்லையென்றாயா முடிவெடுப்பார்கள்?

பாக்கிஸ்தான் காரன் கண்டால் அஸ்ஸலாம் அலைக்கும் என்கிறான்.
 சோமாலியன் கண்டால் பத்து நிமிசம் பிடிச்சு வைச்சு அவன் பாசையிலேயே கதை சொல்லி கழுத்தறுக்கிறான்.

இந்த வெள்ளைக்காரிகள் ஆபிரிக்க ஆண்களிடம் அப்படி எதைத்தான் கண்டாளுகளோ...?  இரவு பார்ட்டிக்கு போய்வருபவளுகள் காரில் ஏறியவுடன் ஹலோ ஹனி ..ஹாய் சுவீற் என்பாளுகள். நாம திருவாய் மலர்ந்து நம்ம அழுகல் ஆங்கிலத்தை காட்டிவிட்டால் அறுத்த கோழி கழுத்தை தோங்க போடுவது போல் முகத்தை மொபைலுக்குள் புதைத்து விடுவாளுகள்.

வெள்ளைக்காரர் வேறு ரகம் . வாழையில் ஊசியேற்றுவதுபோல் நைசா கதைவிடுவார்கள் .
இவ் யூ டோண்ட் மைன்ட்....
 என்றே ஆரம்பிப்பார்கள்
கேட்ட கேள்விக்கு நான் சிறிலங்கன் என்று பதிலளித்தால் ..நினைத்தேன்.. நீ பார்ப்பதற்கு ஆபிரிக்கன் போலிருந்தாலும் உனது ஆக்ஸன் ஏசியனாகவே  தெரிந்த போதே நினைத்தேன் என்பார்கள்... ற்கும் .பெரிய கண்டுபிடிப்புதான்.

இது பரவாயில்லை..  ஒரு கோனர்  கடைக்குள் நுழைந்தேன் .
தமிழ்பெண்தான் காதில் போனோடு நின்றா.
தண்ணீர் போத்தலொன்றை எடுத்து சென்று காசை நீட்டிய போது அடுத்த பக்கத்தில் சீரியல் பற்றி சீரியசா பேசிக்கொண்டிருந்வரிடம் இவ சொல்லுகிறா.... கொஞ்சம் பொறுடி கறுவலொருவன்  நிற்கிறான் அனுப்பிட்டு வாறனென்று.
காசை கொடுத்து மிகுதி சில்லறையை வாங்கும்போது கேட்டேன்..
ஏன் தங்கச்சி உங்கள் கடைக்கு வெள்ளையர்கள் ஆபிரிக்கர்களை தவிர வேறு கஸ்டமர்களே வருவதில்லையா ?
கேட்டதுமே மாமல்லபுரம் சிலை போல நிற்குது தங்கச்சி.

கதவை திறந்து வெளிவரும் போது காதில் விழுகிறது.

"எடி..சரியா கறுவலப்போலடி... நம்மட சிறிலங்கனடி.."

கீத்றோ எயார் போர்ட் கார் பார்க்கில் நிற்கிறேன் .கன நேரமாக என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு ட்றைவர் என்னை நெருங்கி வந்து கேட்கிறார் .

 "அண்ணே நீங்க சிறிலங்கனோ "
"சிறி லங்கன் இல்லையெண்டு நினைத்திருந்தால் இன்னொரு நாட்டவனிடம் என்னெண்டு தம்பி நீர் தமிழில் கேள்வி கேட்பீர் "
"அப்பிடித்தான் நினைச்சனண்ணன் ஆனா உங்கள பார்க்க சொல்லேலாதண்ண "
அறிவு கொழுந்து.

ஆக இத்தால் நான் சொல்ல வருவது என்னவென்றால் முகநூலில் என் படங்களை பார்த்து விட்டு அண்ண நீங்கள் செம அண்ணா என்கிற தம்பிமாருக்கு வடிவேல் வாய்சில் சொல்லுகிறேன் ..அதெல்லாம் கிராபிக்ஸ்டா  சண்டாளனுகளா என்னைய நேரில பார்த்தா செத்துடுவீங்கடா.

மூன்று வருடங்களுக்கு முன்பு சிறிய கம்பனியில் வேலை செய்யும் போது இளம்வயது தமையனையும் தங்கையையும் எயார் போர்ட்டுக்கு அழைத்து  சென்றேன் ஈழத்தவர்கள்தான் .
அப்போதல்லாம்  ட்றைவர் பெயர் கஸ்டமருக்கு அறிவிப்பதில்லை.

பகல் இருண்ட குளிர் காலம் .பின்னேரம் என்பதால் வாகன நெரிசல் .எனக்கு தெரிந்த குறுக்கு பாதைகளால் போய்க்கொண்டிருந்தேன் . சாரதி மாற்று பாதை எடுப்பதை கட்டாயம் கஸ்டமருக்கு சொல்லவேண்டுமென்பது விதி. சொல்லியுமிருந்தேன் காரணத்தோடு.
போய்க்கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு தாயிடமிருந்து போன்.

"எயார் போர்ட் போய் சேர்ந்திட்டியளே?"
" இன்னும் இல்லயம்மா சரியான ட்றபிக் அம்மா."
" இப்ப எவடத்தாலை போறீங்கள் ?"
"தெரியல்லம்மா ட்றவர் சோட் றூட்டாலையெல்லாம் போறான் .. பரவாயில்லை நல்ல ட்றைவர் போலதான் தெரியுறான் "
"விசர் கதை கதை கதைக்கிறாய் பிளைட்டுக்கு நேரமாகுது உவன் சுத்தியடிச்சுக் கொண்டு திரியறான் போல ..ஆரு பிள்ள ட்றைவர்.?"
"தெரியல்லம்மா.. கறுவல்போலவும் தெரியுதம்மா"
" இஞ்சே கவனம்  அங்க உங்க சுத்தி போனதுக்கெல்லாம் சேர்த்து கூட காசு கேட்பான் ... நான் கொம்பனியில பேசுன காசு 40 பவுண்டுக்கு மேல குடுத்திடாதையுங்கோ சரியா.? "
 " சரியம்மா பேந்தெடுக்கிறன் வையுங்கோம்மா"
...
....
...
எயார் போர்ட் போய் பெட்டிகளை இறக்கி 40 பவுண்டுகள் பெற்றுக்கொண்ட பின் கேட்டேன் .
" பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் எவடம்?"
 "omg.. அங்கிள் ....சொறி அங்கிள் .. சொறி ..சொறி..
" கவனமா சந்தோசமாக போய்வாங்க பிள்ளைகள்."
சொல்லி விட்டு வீடு வந்து சேர பத்து மணி..கதவு சாவியை எடுத்து வர  மறந்து போயிருந்தேன். விறைக்கும் குளிர் வேறு. தலைமூடிய ஜக்கற் ...கதவை தட்டினேன் .
ஜன்னல் சீலையை விலத்தி மகள்பார்ப்பது உள் வெளிச்சத்தில் தெரிகிறது.

ஐந்து நிமிடமாகியும் கதவு திறந்தபாடில்லை .மொபைலை எடுத்து  " " "என்னப்பா மனிசன் குளிருக்க விறைச்சி சாகுறான் கதவ திறவாமல் என்ன செய்கிறியள் ?"

அவசரமாக ஓடி வந்து கதவை திறந்த மனைவி கேட்கிறா
" நீங்களேப்பா  .ஆரோ கறுவல் கதவ தட்டுறானம்மா எண்டு பிள்ள சொல்லிச்சு இந்த நேரத்தில திறக்க வேண்டாமம்மா எண்டு நான்தான் சோன்னநானப்பா."
" ....."
" ஏனப்பா அந்த கீய மறக்காமல் கொண்டுபோறதுக்கென்ன உங்களுக்கு... சும்மா கண்ட நேரத்தில வந்து கதவதட்டி மனிசர பயம் காட்டிக்கொண்டு...."
எல்லோரும் தங்கட தங்கட O/L அனுபவம் பற்றி சொல்லும் போதுநான்மட்டும் ஏன் சொல்லக்கூடாது.? நானென்ன. .O/L லே எடுக்காத முட்டகழுதையா ?

எடுத்து விட்றன் கதையை. கேட்டுட்டு இது நம்பும்படியாக இல்லையென்பவர்கள் உடனடி நட்பு நீக்கம் செய்யப்படுவீர்கள்.😁😁😁.
எங்கட காலத்தில் இந்த A கணக்கெல்லாம் இல்ல .D தான் எங்களுக்கு பெரிசு.
 சந்தையில கலப்பு மீன் வாங்குமாதிரித்தான் நானும் ரெண்டொரு D யும் மிச்சமெல்லாம் S உம் Fமா வாங்கியிருந்தன்..
அடுத்த வருசம் A/L . 
எதையும் வித்தியாசமா செய்து பார்க்குற நம்ம புத்தி நம்மள குத்தி கிளப்ப சும்மா இருந்த நான் சும்மா இருக்கேலாம அடுத்த வருசம் O/ L க்கு கோம்சயன்ஸ்சுக்கு ( மனையியல் ) அப்ளை பண்ணிட்டன் .

கோம்சயன்ஸசுக்கான பரீட்சை நிலையம் முஸ்லீம் ஏரியாவுக்குள். ஆய்சா மகா வித்தியாலயம் .
கொஞ்சம் பதட்டத்துடன்தான் உள்ளே போனேன்.
பத்து பேர்களுக்குள்தான் தமிழ் பெண்பிள்ளைகள் . மிகுதியெல்லாம் முஸ்லிம் பெண்பிள்ளைகள் .ஏண்டா எங்கட மானத்தை வாங்குறாய் என்பது போல் தமிழ் பிள்ளைகள் முறைத்து பார்க்குதுகள் .அதற்குள் நம்ம முட்டை காதலி மலரும்.

முஸ்லிம் புள்ளையள் தங்களுக்குள்  குசுகுசுத்து பேசி சிரிக்குதுகள். நிர்வாணகாட்டுவாசிகள் நடுவே இலை தழை உடை உடுத்தவன்போல நான் .

பரீட்சை நேரம் தொடங்கியது. முதலில் எழுத்து பரீட்சை . பழைய வீ சி மெம்பர் கியாவுடீன் மாஸ்டரின் மனைவிதான் பரீட்சை மண்டப மெயின் சுப்போவிசர்.அவர்தான் பேப்பர் தந்தார் . வினாக்களெல்லாம் எனக்கு ஜுஜீப்பி ரகம் .உரிய நேரத்துக்கு முன்பே எழுதி கொடுத்துவிட்டு மிகுதி நேரத்தில் மேசையில்  கீறிய இதயத்துக்குள் அம்பை செருகிக்கண்டிருந்த என்னை  விடைதெரியாமல் முழிசிக்கொண்டிருந்த பெண்கள்  கண்கள் ஆச்சரியமாக பார்க்கிறதையும் அவதானித்தேன்.

எழுத்து பரீட்சை முடிய செய்முறை பரீட்சை.
எல்லாருமே முன்கூட்டியே பேசி வைத்தது போல் ஒன்றாக கூடி கலாய்க்க தொடங்கிவிட்டது பெண்பிள்ளைகள் கூட்டம் .இந்த கூட்டத்துள் ஒரு தமிழ் பிள்ளைகூட இல்லை . என்னை கலாய்த்தவர்களெல்லாமே முஸ்லிம் பிள்ளைகள் . அதிலும் அந்த வாயாடி பொண்ணு என்னை படுத்திய பாடு.... கிட்டத்தட்ட ராக்கிங் தான் .

இரண்டு செய்முறைகள் செய்து காட்ட வேண்டும் .
எனக்கு வந்தது கிழங்கு பொரியலும் , குழந்தை குளிப்பாட்டும் முறையும் .

மரவள்ளிக்கிழங்கை வெட்டும் போது அந்த வாயாடி பொண்ணு கேட்குது.
" பார்க்க பாவமா இரிக்கு கெல்ப் ஏதும் வேணுமா "
கிழங்கை மஞ்சள் தடவி அழகிய கலரில் பதமான பருவத்தில் இறக்கி தட்டில் டிசைனாக அடுக்கி வெங்காயத்தில் சோடினை செய்து பார்வைக்கு வைத்த போது வாயாடி சொல்லுது  " ப்பாஹ் அழகாத்தானிரிக்கி எலா ?"

அடுத்து குழந்தைக்கு குளிப்பாட்டல்...

இளஞ்சூட்டு நீரை புறம் கையால் பதம்பார்த்து தரப்பட்ட பாவை பிள்ளையை நீருக்குள்  இருத்தி நெற்றியில் இரு விரல் மறைத்து குளிக்க வைத்து  , துடைத்து , துவாயில் படுக்க வைத்து , கண் துடைப்பதையும் , பகுடர் போடுவதையும் கியாவுடீன் மாஸ்டரின் மனைவி புன்முறுவலுடன் பார்த்து நின்றா.

" பாப்புள்ளைக்கு உசிர் இருந்தா கூட்டிக்கு போகச்செல்லி குழறுமாக்கும் .. அவ்வளவு அன்பு எலுவாடி ?"
வாயாடி சினேகிதியிடம் கேட்குது.

இது முடிய நான் கிழங்கு பொரியலிடம் போனால் வெறும் தட்டுதான் இருந்தது .திரும்பிப்பார்க்கிறேன் கொடுப்புலிபோல வாயாடி. எனது கிழங்கு பொரியலெல்லாம் வாய்க்குள்.
" என்ன ஊட்ட கொண்டோக இருந்தாக்குமா?"

அன்று நான் தப்பி பிழைத்ததே பெரும்பாடு.என்றாலும்  எனக்கு D கிடைத்ததென்பதை நீங்கள் நம்பித்தான்  ஆகவேண்டும்.

அடுத்த வருடம் A/L பொருளாதாரபாட ரியூசனுக்கு  அதே வீதியில் உள்ள அபுல்ஹஸன் சாரின் வகுப்பின் முதல் நாள் ...
"நீங்கானே அட்டைக்கு கோம்சயன்ஸ் எக்ஸாமுக்கு வந்த ... என்ன பாஸா ? நீங்க அந்த பாப்புள்ளய படுத்துன பாட்டுக்கு பாஸாகாம என்னயிற...."
அட அதே வாயாடி இங்குமா ?
"ஒங்குட பேரென்ன?"
"விமலதாஸன் "
"ஆ...வி..ம..ல..தா..ஸ..னா.?"
சரி அவள்  பெயரென்ன?

அவள் பெயர் தமிழரசி அல்ல .
அவள் பெயர்தான். " நஜீமா"

#புதியநட்புகள் எனது "நஜீமா" பதிவு அவசியம் பார்க்க வேண்டும்#

#நினைவடைசல்#
எங்கள் வேட்கை இன்னும் தணியவில்லை, எங்கள் தாகம் இன்னும் தீரவில்லை  , விட்ட இடத்திலிருந்தே தொடர்வோம் தனி தமிழீழத்தை வென்றெடுப்போம் என வீராதிவீர கோசம் போடும் புலம்பெயர் உறவுகளே.....!!!!

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒற்றை ஆட்களாகத்தான் வந்து சேர்ந்தோம். இப்போது இருபத்தைந்து வயது மகன்களை வைத்திருக்கிறோம். நம்மில் எத்தனை பேர் நம் பிள்ளைகளை இந்த இரண்டாம்போருக்கு நாட்டுக்கு அனுப்ப தயாராகவிருக்கின்றோம்?

முன்னாள் போராளிகள் சும்மாதான் இருக்கிறார்கள். அனுப்பினால் இலவச பயிற்சி அளிப்பார்கள்.  ...

செய்வீர்களா ? செய்வீர்களா?
கொலிடே போய் கீரி மலையிலும் , பாசிக்குடாவிலும் குளிக்க வேண்டுமென்பதற்காக முகத்தை மறைத்து கோசம் போடுபவர்கள் முதலில் போய் இறங்க வேண்டும் .

# இந்த வேட்கை , தாகம் , தமிழீழம் , என்ற வார்த்தைகளுக்கும் , முடிவுகளுக்கும் உரித்துடையவர்கள் அந்த மண்ணில் இருப்பவர்கள் மட்டுமே#

Friday, 23 March 2018

சாரதியின் கதை. ..ரோசி part 02

====================================

முற்குறிப்பு:- லண்டனில் எங்களை  driveer என்றுதான் அழைப்பார்கள் .அதற்குமப்பால் .சிலர் எங்களை... மிஸ்டர்  , ஜென்டில்மேன் , ஹனி  சார் .Friend , Brother ,  darling , sweet .yo , ya man , handsome என்றெல்லாம் அழைப்பதுண்டு .

இந்த சொற்பிரயோகங்களை  வைத்தே பணக்காரர்படித்தவர்கள் , நடுத்தரத்தினர் , பாட்டாளிகளென்று பிரித்து பார்ப்பார்கள் .

அவரவர் குடும்ப வளர்ப்புமுறை.சுற்றாடல் பழக்கவழக்கங்களை  பொறுத்தே அவர்களின் பேச்சுக்களும் இருக்கும்.

ரோசியின் ஓனர் என்னை மட்டுமல்ல எல்லா ஆண்களையும் கேன்ட்ஸம் என்றே அழைப்பாரென நினைக்கிறேன்.  ஆக தம்பிகள் கடுப்பாகவேண்டாம் அவள் என்னை கேன்ட்ஸம் என்பதில்.
*********************************************

சிறிய கம்பனியில் வேலை செய்யும் போதெல்லாம் கஸ்டமர்கள் எல்லாருமே பழக்கமான முகங்களாக இருப்பார்கள் . ஒவ்வொரு நாளும் பார்ப்பதால்.

இப்போது அப்படியில்லை.. ஒரு கஸ்டமரை ஆறு மாதத்துக்கு பின்பும் காண்பதுண்டென்பதால் அவர்கள் பெரிதாக நினைவில் நிற்பதில்லை .

அது நடந்து நாலைந்து மாதங்களுக்கு பின்பு இருண்ட பின்னேரப்பொழுதொன்றில் போய் வாசல் முன்பு நின்ற போதுதான் அது ரோசியின் வீடேன்பதை உணர்ந்தேன் .

மீண்டும் ஓர் சவ கார் ஓட்ட நான் தயாராக இல்லையென்றாலும் கூட என்னால் தவிர்க்க முடியவில்லை . காரணம் நான் போவதற்கு முன்பே ரோசி யுடன் எனக்காக வெளியே காத்து நின்றிருந்தாள் அவள் .என்றாலும் நான் உடனடியாக ஏற்றிக்கொள்ளவும் இல்லை .

ஹாய் கேன்ட்ஸம் என்று கொண்டு வந்தவளிடம்  சொறி மேடம் நான் உன்னை சவாரிக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதென்று நான் சொன்னதும் காரணத்தை கேட்டவளிடம் கடைசியாக நடந்ததை சொன்னதும்தான்  அவளுக்கே அது நினைவுக்கு வந்தது.

ஓஹ்   ..மை  கேன்ட்ஸம் .. ஐ யம் ஸோ  சொறி அபவுட் தற் டே.. 

ஓகே மேடம்.. இருந்தாலும் இன்னொரு தடவை நான் என் காரை நாசம் பண்ண தயாரில்லை ..உன்னை நிராகரிப்பதற்கான சகல காரணங்களும் என்னிடம் உண்டு ..நீ கோவிக்கமுடியாது.

நோ கேன்ட்ஸம் அன்றைய போல இண்டைக்கு நடக்காது நீ என்னை நம்பலாம் என்றாள்.

அண்டைக்கும் இதே போல்தான் சொன்னாய் கடைசியில் என்ன நடந்தது தெரியும்தானே .

அது அன்று... இன்று.... புறோமிஸ் என்னை நம்பு என்று கெஞ்சினாள் ...அப்போதுதான் ரோசியை கவனித்தேன் .குளிர் காலமென்பதால் தலைமூடும் ஜக்கற் . .. கழுத்தில் மப்ளர் என வலைன்டையன் டேயில் காதலனை சந்திக்கபோகும் காதலிபோல ரோசி புல் மேக்கப்பில் இருந்தது.

 ரோசி இன்று அசிங்கம் பண்ணாததென்பதற்கு என்ன உத்தரவாதமென்றதற்கு அதெல்லாம் சீக்கிரட் நீ என்னை நம்பு என்று கொண்டு ஏறியவள் ஒரு வெள்ளை துணியை கார் சீற்றில் விரித்து ரோசியை உட்கார்த்தினாள்.

நான் நாய் வாங்கிய எனது ஆரம்ப நாட்களில் இந்த இடத்தில்தான் யூரின் போக வேண்டுமென்று பழக்குவதற்காக வெளியே அடையாளத்துக்காக ஒரு நியூஸ் பேப்பரை விரிப்பதுண்டு .அப்படி ரோசிக்கான அடையாளம்தான் இந்த வெள்ளை சீலைபோல என்றெண்ணி இதுதானா அந்த சீக்ரட்  என கேட்டபோது அவள் சொன்னாள் ..

நோ ..நோ.. கேன்ட்ஸம் தற் டிபரண்ட்..

அப்ப இந்த வெள்ளை துணி.?

அது ரோசியின் புது உடுப்பு ஊத்தையாகாமல் இருக்க...

அட இஞ்சார்ரா காலத்த. அட்டைக்கு மூத்திரமடிச்சான் ரோசி இண்டைக்கு நமக்கே புதினம்காட்டுது..எனக்குள்ளேயே நினைத்தபடி காரை ஓட்டினேன்.

இடைக்கிடை உள் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டேன்.  வெள்ளை சீலை நனைந்ததாகவும் தெரியல்ல.

டோண்ட் வொறி கேன்ட்ஸம் ஐ யம் ரெல்லிங் யூ. ஸீ இஸ் நொட் கோயின் டூ எனிதிங் ருடே.

சண்டாளி எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறாள்... எனது பயமெல்லாம் ரோசி ஏதும் செய்தால் அதன் பின் அவள் ஸ்பிரே பண்ணும் பேர்பியூம் பற்றித்தான்.

அரைமணி நேர ஓட்டத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது .
அப்போதுதான் திரும்பி பார்த்தேன் .ம்கும் ..
ரோசி ஏதும் நனைத்தாக தெரியவில்லை.

நான்தான் சொன்னேனே நீ என்னை கடைசி வரை நம்பவே இல்லை ஜங் மேன்.

ஆமா ஆச்சரியம் ...ரோசியின் சுகர் லெவல் இப்ப ஓகேவா ?

நோ..கேன்ட்ஸம் ஸ்ரில் சேம்..

அப்ப எப்படி ..இன்று இவ்வளவு கொன்றோளில் ரோசி..?

இறங்க முற்படும் போது கள்ள காதலனிடம் கண்ணடித்து கதைபேசும் காதலிபோல ஒற்றை கண்ணை மூடி அவள் சொன்னதை கேட்டதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை  ஸ்ரேரிங்கில் தலையை புதைத்து சிரித்து கொண்டே இருந்த எனது தொளை அமுக்கி அவள் சொன்னாள்...
வை யூ லாவிங் சில்லி ஜங் மேன்.. இற் இஸ் ட்றூ கேன்ட்ஸம் ...

இறங்கி போய்விட்டாள் ..நான் சிரித்து கொண்டே இருந்தேன்.

அவள் சொன்னது.

யூ ங்நோ கேன்ட்ஸம் மை ரோசி வெயாரிங் நப்பி  .

Tuesday, 13 March 2018

சாரதியின் கதையிது
====================

இந்த இடத்தில்  இருந்து இந்த பெயருடையவர் அழைக்கிறார் .அவரை கூட்டிச்சென்று இந்த இடத்தில் விடவேண்டும் என்ற கட்டளை கிடைக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்பதே எனது தொழிலின் முக்கிய சட்ட விதி .

 யாராவது வீதியில் மறித்து அவசரமாக செல்ல வேண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றாலோ ,அல்லது தனக்கோ தன் மனைவி குழந்தைக்கோ சுகவீனம் அவசரமாக மருத்துவமனை  போக வேண்டுமென்று கேட்டாலோ கூட எங்களின் பதிலில் முடியாதென்பதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது .
சில வேளைகளில் இந்த விதி முறைகளை மீறுகின்ற சாரதிகளை கையும் களவுமாக பிடிப்பதற்கென்றே பல அதிகாரிகள் மாறு வேடங்களில் அலைவார்கள் . பார்ப்பதற்கு பரம சாது போல, குடிகாரர் போல , நோயாளிகள்போல , உத்தியோகத்தர்கள் போல ...எப்படி வேசத்திலும் வருவார்கள் இவர்கள் .

ஹுசைன்  ஜேர்மனியில் பிறந்த சோமாலியன் 37 வயது. என்னோடு ஏழு வருட நட்பிலிருக்கிறான். அவனும் சாரதியேதான்.  இருவரின் தாய் மொழியிலிருந்தும் இருபது இருபத்தைந்து சொற்களை புரிந்து கொள்ளுமளவுக்கு எங்களின் நட்பு நெருக்கமானது .இலங்கை யுத்த வரலாறு விபரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறான் .பிரபாகரனை ஹீரோவாக கொண்டாடுவான். அண்ணா என்றுதான் அழைப்பான் . உதவி மனப்பாங்குள்ளவன். இத்தனையும் உள்ள ஹுசைனிடம் உள்ள வீக்பொயின்ர் ஒண்டு என்றால் அது பெண்கள் விசயம்தான்.
எந்த பெண்ணை கண்டாலும் விசிலடிப்பான், கொஞ்சதூரம் பின்னால் போய்பேசுவான்/ பேசமுயற்சித்து திரும்புவான் .பெண் பிரயாணிகளுடன் அதிகமா பேசியதாக கம்ளையின் போய் தனது ரேற்றிங் குறைவதை பெருமையாகசொல்லுவான். மொத்தத்தில் மொக்கு மரத்தைகூட கசிகிறதா நசிகிறதா என்று அமுக்கி பார்க்கும் வீக்கானவன் ஹுசைன்.
இவன் எப்பவாவது ஒருநாள் இந்த அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வானென்பதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை .அதை அவனிடம் சொல்லியுமிருக்கிறேன்.

கடந்த வாரம் அவசரமாக போன்பண்ணியவன். தன்னை நேற்று இரவு  பொலீஸ்அரஸ்ட் பண்ணியதாகவும். இரவு முழுவதும் உள்ளே வைத்திருந்து தனது லோயர்மூலமாக இப்போதுதான் வெளிய வந்திருப்பதாகவும் வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போய் விட முடியுமாண்ணா என்று கேட்ட அரைமணி நேரத்தில் இருவரும் ரெஸ்டாரண்டில் இருந்தோம் .
நான் கூட தம்பி பெட்டையுடன் சேட்டை விட்டுத்தான் மாட்டுப் பட்டிருப்பாரென்றே முதலில் நினைத்தேன். ஆனால் அவன் சொன்ன கதையோ வேறு .
பொதுவாக மாறு வேடத்தில் அதிகாரிகள் காருக்குள் வந்தமர்ந்த நிமிடத்திலேயே சாரதி குற்றவாளியாகி விடுவார்.
யூ ஆர் அண்டர் அரஸ்ட் என்று தமிழ்படங்களில் சொல்வதுபோல அதிகாரி தனது அடையாள அட்டையை காட்டினால்..ஓஹ்.சிற் என்று கொண்டு ட்றைவர் தலையில் கை வைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது . ஆனால் ஹுசைனோ கொஞ்சம் வித்தியாசமாக அதிகாரியின் முகத்திலேயே கை வைத்ததால்தான் கைது வரை போயிருக்கிறது.

ஏனடா இப்படி செய்தாய்என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் ஒரு தர்மம் இருப்பதாகவே தெரிந்தது எனக்கு.

இவன் ஒரு சொப்பிங்சென்ரர் கார் பார்க்கிங்கில் நின்றிருக்கிறான் . சொப்பிங்சுமைகளுடன் கால் முறிந்து காலில் கட்டுப்போட்டு தடியூண்டி வந்தவன் தன்னை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும்படிகேட்க மனமிரங்கிய ஹுசைன் சரி ஏறு என்றிருக்கிறான் காரில் ஏறி உட்கார்ந்தவன் கால்களை நீட்டி நிமிர்த்தி கார்ட்டை காட்ட கடுப்பாகிவிட்டான் ஹுசைன்.

உனது உத்தியோயத்தைநிலை நாட்ட உனக்கு கிடைத்த வேஷம் இதுதானா என்று புதிய பறவை சிவாஜி போல ஹுசைன் வசனம் பேசி இருக்கிறான். இல்லை கோபால் இல்லை என்னை நம்புங்கள் கோபால் என்று பதில் சொல்ல அதிகாரியென்ன சரோஜா தேவியா?
வாக்கு வாதம் முற்ற அதிகாரியின் முகத்தில் குத்திவிட்டான் ஹுசைன்.

இவன் இப்படி வேஷம் போட்டு வந்தால் நாளைக்கு உண்மையிலேயே ஒரு மாற்று திறனாளி ரோட்டில் விழுந்து கிடந்தால்கூட எந்த ட்றைவர் உதவுவான்? எனது கோவம் நியாயமானதா இல்லையா அண்ணா என்று கேட்டபோது என்னிடம் பதிலிருக்கவில்லை.

என்றாலும் ஹுசைன் நீ கை வைத்தது தவறுதான் .இந்த நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஒரு நாள் பொறுமை காத்த கதையொன்றையும் சொல்ல வேண்டியிருந்தது.

கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முந்திய அதிகாலை மூன்று மணியளவில் நோர்த்லண்டன் ஆர்ச்வேய் ரோட்டில் வந்து கொண்டிருக்கிறேன் .  மின்விளக்குகள் பனிபுகாருக்குள் மறைந்திருந்த  மங்கிய வெளிச்சத்தில் நான் கடந்து போகமுடியாதவகயில்  திடீரென வீதியில் இறங்கி கை போட்டு காரை மறிக்க நான் மெதுவாக நிறுத்த ..... உடலெது உடையெது என்று தெரியாத நிறத்தில் கார் ஜன்னலை நெருங்கினாள் அவள்.
அழகி... இருண்ட வீதியில் ..கறுப்பு தாளில் வெள்ளை நிறத்தில் வரைந்த புரியாத நவீன ஓவியம் போல அழகாய் இருந்தாள்.
கார் கண்ணாடியை பாதி இறங்கினேன்.
 என்னை நான் முற்றும் திறந்த முனிவர் மைன்ட் க்கு செற்பண்ணிக் கொண்டேன்.

தேவதை வேடத்தில் வந்திருப்பது அதிகாரியாகவும் இருக்க கூடும் கவனமாக இரடா விமலா என்றது மைன்ட்.
பாதி கண்ணாடிக்குள் தலையை புகுத்தியவள் ஹாய் என்று கொண்டு உதட்டை நெழிக்க முதல் அம்பு வந்து தாக்கியது முனிவனை .முனிவன்அசவதாய்இல்லை.
நேரமாகி விட்டது வாகனம் ஏதுமில்லை  . நான் வீடு போகவேண்டுமென்றாள்.
நான் உனக்கு உதவ முடியாது  மன்னிக்கவும் என்றேன்.
நீ அப்படி சொல்ல முடியாது .இந்த நேரத்தில் நான் எப்படி போவேன் என்றவள்.முனிவன் மேல் எய்வதற்கு இரண்டாவது அம்புனையும் எடுத்தாள்.
பர்சை திறந்து பணத்தை காட்டி எவ்வளவும் தருகிறேன் என்றாள்.
முடியாதென்றேன்.
பாதி திறந்திருந்த கண்ணாடி வழியே முன் அங்கங்களின் பாதிகளை பாதகி வழிய விட்டாள் .
முகத்தை முன் வீதியில் வைத்துக்கொண்டே மன்னிக்கவும் முடியாதென்றேன்.
நான்காவதாக ஒன்று சொன்னாள் அவைகள் எழுத்தில் சொல்லமுடியாதவைகள்.
( வேண்டுமானவர்கள் In Box வாருங்கள் )
இப்போது எனக்கு கொஞ்சம் கோபமும் தலைக்கேறியது.
ஜன்னலில் தொங்குபவள் தலையை வெளியே எடுத்தால்தான் நான் போக முடியும் . நீண்ட நேரமாக நின்றாள் .
நான் போகவேண்டும் என்னை விடு என்றேன்.
எப்படி நீ போக முடியும் இந்த நேரத்தில் என்னை  இந்த இடத்தில் விட்டுவிட்டு என்றாள்.
காற்று வீசியடித்ததில் பின் இறங்கியிதிருந்த உடைவிலத்திய உடல்பகுதியை மூடி மறைக்க அவள்  நிமிர்ந்த போதில் இதுதான் சந்தர்ப்பமென நான் தப்பிப்பிழைத்து வந்த கதையை சொல்லி முடித்தபோது ஹுசைன்என்னை கோவமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல நடக்க வேண்டும் ஹுசைன். நமக்கு நமது லைசன்ஸ் முக்கியமென்ற என்னை ஹுசைன்  முறைத்து  பார்த்து சொன்னான்.

நீ ஒரு F***** இடியட் , ஸ்ருப்பிட் நானாக இருந்திருந்தால் லைசன்ஸ் போனாலும் பரவாயில்லை அந்த B****ஐ  ஏற்றிக்கொண்டே போயிருப்பேன்.

சனவரி31/2018
தமிழ் கடைக்கு போயிருந்தன்.
பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த என்னை வாசலில் வழிமறித்தார்கள் இரண்டு தமிழ் இளைஞர்கள் .

" அண்ணா கொஞ்சம் கதைக்க வேணும் "
" சொல்லுங்க தம்பி என்ன?"
கையிலிருந்த நோட்டீஸ்களில் ஒன்றை கையில் திணித்தார்கள்.
" நாட்டுல நடக்கப்போகிற எலக்சனப்பற்றி கொஞ்சம் கதைக்க வேணும்.
" ம் "
" எங்கட தமிழினத்தின் உரிமைகளை மீட்பதற்கான முயற்சிகள தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு நாங்கள் இந்த தேர்தலில் இவையளுக்கு வாக்களிக்கவேணும்."
"ம் "
" உங்களுக்கு விளங்குதாண்ணா நாங்கள் என்னசொல்றமெண்டு?,
"ம்"
" அதாவதண்ணா நாங்கள் இந்த கருத்தை பரவலாக கொண்டு செல்ல வேண்டும் அண்ணா "
"ம் "
"ஊரிலுள்ள  உறவுகளுக்கு எடுத்து சொல்லவேணுமண்ணா நீங்கள்"
"ம் "
" உங்களுக்கு முகநூல் இருக்காண்ணா?"
"ம் "
" நல்லதண்ணா முகநூலிலும் பகிருங்களண்ணா "
" ம்"
" அண்ணா நாங்கள் சொன்னது விளங்கிச்சோ?"
" ம் "
 " அண்ணா மறக்க வேண்டாம் "

மீண்டும் ஷோபாசக்தியின் நாவல் தலைப்பையே பதிலாக்கி விட்டு நடந்தேன் .
எனது ஊரையோ எனதூரில் அவர்கள் சொன்னவர்கள் போட்டியிடுகிறார்களா என்பது பற்றியெல்லாம்அவர்கள்  கேட்காத வரையில் போதுமென்ற நிம்மதி எனக்கு.

லண்டனில் 30 வருடமாக பல அன்னிய இடங்களுக்கு  சகஜமாக போய்வந்தாலும் மட்டுமரியாதையாக , தயவு தாட்சண்ணியத்தோடு, அடக்கொடுக்கமாக அன்னிய உணர்வுடன்  நான் போய்வரும் இடம்  ஒன்றென்றால் அது நம்ம தமிழ் கடைகள்தான்.

பிப்3/2018
பார்ட்டிகளுக்கு போகும்போது மகனாருக்கு கார் கொண்டு போக அனுமதியில்லை. ஒரு கிளாஸ் பியர் குடித்து பிடிபட்டாலே லைசன்ஸ் பறி போய்விடும்.

நண்பனின்  பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்த மகனை கூட்டி வர போய் வெளியில் காத்திருந்த போது அந்த பிள்ளைதான் முதலில் வெளியே வந்தாள்.
மகனின் பள்ளி தோழி .

பாடசாலை , பல்கலைக்கழகம் வரை தொடர்ந்த நட்பு உத்தியோகஸ்தர் ஆன பின்பும் தொடர்கிறது.
காதலன் இருப்பதாகவும் கேள்வி . கடைசியாக கண்டது மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த மகனின் பிறந்த நாள் பார்ட்டியில்தான்.

கதவை திறந்து வந்தவள் என்னை கண்டதும் ஹாய் அங்கிள் என்றாள்.
பின்னால் மகனும் வந்து நிற்பதை அவள் அவதானிக்கவில்லை.

"எப்படி அங்கிள் இருக்கிறீங்க சுகமா?"

" இருக்கனம்மா நீங்க சுகமா"?

" ஓம் அங்கிள் நல்லம். உங்கள கண்டு கனநாளாயிற்று பார்க்க வித்தியாசமா இருக்கிறீங்க"

" இருக்கும்தானே வயது போனா"

" இல்லை அங்கிள் யு லுக் சோ ஜங் அங்கிள்"
இந்த நேரத்தில்தான் மகன் அந்த பிள்ளையின் முதுகை ஒற்றை விரலால் நோண்டி சொன்னான்.

"பத்து வருசமா நான்  உன்னோட பழகுறன் , இதுவரைக்கும் உனக்கு என்னை பார்க்கவேணுமெண்டு நினைப்பே வரல இப்ப அப்பாவுக்கு லைனா? "

மகனை அடிக்க ஓடினாள்.. .மகன் பிடிபடாமல் ஓடினான் .....இந்த நேரத்தில் அவளின் காதலனும் வெளியில் வந்து  what's going on ? what happened ?என்று  கேட்க மகன் சொன்னான்.

"உன்ர ஆள் என்ரைஅப்பாவுக்கு லைன் போட்றாடா" 

காதலன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அங்கிள் Please அங்கிள் என்னை தாடி வளர்க்க வைச்சிடாதீங்க அங்கிள்"

கொஞ்சநேர சிரிப்புக்கு பின் விடை பெற்று பிரிந்து விட்டார்கள்.

வரும் போது யோசித்தேன்.
இந்த கால தலைமுறை பிள்ளைகள் எவ்வளவு வெளிப்படையாக பேசி, பேசியதுகளை எவ்வளவு ஈஸியாகவும் கையாள்கிறார்கள்.

நடந்தது என்னமோ சிறு சம்பாசனைதான்.அதற்குள் அடங்கியவைகள்.....?????
வயது போனவனென்று ஒதுக்கி , விலத்தி நிற்கும் போலி புனிதத்தை கட்டுடைத்த விதம்.,

நட்புக்கும், காதலுக்கும் இடையிலான வெளிப்படை, புரிந்துணர்வு ....
 எல்லாவற்றையும் ஒரு நூலிழையில் இவர்கள்  எப்படி கடந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகவே இருந்தது.

இந்த சம்பவம் மட்டும் நமது ஊர்களில் நடந்திருந்தால் இந்நேரம் எத்தனை தலைகள் உறுண்டிருக்கும் .

வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவத்தை மனைவியிடம் சொன்னேன்.
மனைவி கேட்குறா..

" இப்ப என்னப்பா இரவு சாப்பாடு ஏதும் வேணுமா இல்ல இதே சந்தோச மிதப்பில தூங்கப்போறியளோ"?

மீண்டும் ஐம்பத்தைந்து வயதானவனானான்  விமலன்.

#நமக்கெண்டேவந்துவாய்ச்சிருக்கபா#

மார்ச்4/ 2018

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...